Sunday, November 7, 2010

1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும்-புளாட்டில் நான் பகுதி 2

1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும்

எனது பெயர் சீலன். நான் இன்று ஐரோப்பாவில், எனக்கான முகவரிகள் தொலைந்தவனாய் வாழ்ந்துவரும் ஒரு ஈழத்தமிழன். வடக்கே எனது பிறப்பிடமாகும். அந்தச் சிறிய வயதில் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அதனால் அவற்றை ஒருபுறம் வைத்துவிடுவோம்;. இனி எனது போராளி வாழ்க்கையில், நான் நோயாளியாகிப் போராடித் தொலைத்த போராளியின் வாழ்க்கைக்குள் போவோம்.
ஏதோ ஏகாந்தமான, அதிமிதவாத அரசியலால் பொருமி வீங்கத் தொடங்கிய காலமான 1983இல், எனது இளமைக் காலம் இயக்க கீரோத்தனத்தை நாடியது. ஈழ மண்ணின் விடுதலைக்கான ஆயுதப் போராட்ட வடிவங்களுக்குள் நாம் கவரப்பட்டோம். சிறிய பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர் வரை வகைதொகையின்றி, இயக்கத்தில் இணைய ஆரம்பித்த காலம் அது. அக்காலத்திலேயே நான் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்' என்ற அமைப்பில், என்னையும் இணைத்துக் கொண்டேன். உண்மையைச் சொல்லப்போனால், எனக்குள் விடுதலை உணர்வுகள் அன்று இருந்ததென்று சொல்லமாட்டேன். மாறாக எதோ போராடவேண்டும் என்ற உணர்ச்சி வேட்கையே என்னுள் இருந்தது. அதாவது சிங்களவர் என்றாலே அவர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி என்னிடம் இருந்தது. அது என்னை என்னவோ செய்தது. அதற்கான காரணங்களும், எனது ஆழ்மனதில் பதிவாகிக் கிடந்தது.

அன்றைய காலத்தில் எனது தந்தை இலங்கைக் காவல்துறையில் கடமையாற்றினார். அவருக்கு தொலைதூர இடங்களுக்கான மாற்றங்கள் வரும்போது, அவரோடு வீட்டாரும் சேர்ந்து செல்லவேண்டிய நிலை. அப்படித்தான் ஒருமுறை அப்பாவிற்கு புதிய இடமாற்றம் வந்தது. அது 1977ஆம் ஆண்டு. திருகோணமலைக்கு இடம் மாறினோம். எனக்கு அப்போது 11வயது கொண்ட சிறுவன்.

அந்தக் காலத்தில் "தமிழர் விடுதலைக் கூட்டணி"யைச் சார்ந்தோர், திருகோணமலை முத்தவெளியில் பெரிய அளவிலான கூட்டத்தைக் கூட்டினர். அதற்காகப் பல கூட்டணிப் பிரமுகர்கள், பேச்சாளர்கள் வருகை தந்தனர். அவர்களை திருமலை இளைஞர்கள், மாலை சூட்டி வரவேற்றனர். அதன் முன்னணியில் நின்ற சிலர் ஏதோ முறுக்கெடுப்பவராகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும் எனக்குத் தெரிந்தது. நானும் வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்தேன். சிறு கணப்பொழுதில் அவர்கள் தமது கைகளை தாமே சவரத் தகடுகளால் வெட்டிக் காயப்படுத்தினர். சிலரது கைகளில் மிக ஆழமாக வெட்டுப்பட்டதால் நரம்புகள் அறுபட்டு, அவர்களின் இரத்தம் அந்த மண்ணில் நீராய் ஓடியது. அந்தப் பிரமுகர்கள் ஒரு வகையான திகைப்புடன் கலந்த புன்சிரிப்புடன் ஏறிட்டு நின்றனர். இவர்களோ ஒருவகை ஆவேசத்துடன் அங்கே வருகை தந்த பிரமுகர்களின் நெற்றிகளில் அந்த இரத்தங்களைத் தொட்டுத் தொட்டு பொட்டுப் பொட்டாய் திலகமிட்டனர். ஏதே ஏதோ கோசங்கள் வேறு. இதுவோ என்மனதிலில் ஆழப் பதிந்துபோனது.

அன்று அவர்களின் மிடக்கும், அவர்களின் வசீகரமான வீரியப் பேச்சுகளும் இணைந்து, இது என்னைக் கவர்ந்தது. எங்கள் தமிழினத்தை தினமும் அழிக்கின்ற சிங்கள அரசை உடைக்கவேண்டும் அழிக்க வேண்டம் என்று அறைகூவினர். இது எதிரிச் சிங்களரை எதிர்த்துத் தாக்கவேண்டும், அழிக்கவேண்டும் என்ற உந்துதலை, என்னுள் ஏற்படுத்தி என்னை எரியவைத்தது.

1983 முற்பகுதியில் இயங்கங்களின் செயற்பாடுகள் ஒரளவு துரிதமடைந்த காலகட்டம். அக்காலத்தில் தான் பல இயக்கப் புத்தகங்கள், பத்திரிகைகள் எனது கையில் கிடைக்கப்பெற்றன. அவற்றை வாசிக்கும் போது உணர்சிகள் தானகவே வரும். அதுமட்டுமின்றி யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும், இதற்கு பாடசாலைகளிலும், ஊர் மக்கள் மத்தியிலிருந்தும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதை வழிபட்ட எமக்கு, போராட்டப் புத்தகங்களையோ அல்லது பத்திரிகைகளையே தருபவர்களை, ஏதோ ஒரு கிரோக்களாகவே பார்த்தோம். இப்படி எல்லோரும் பார்த்தனர். அப்படி பார்க்க வைத்தனர். அன்றைய காலகட்டத்தில், இயக்கத்தில் இருப்பதென்பது ஒருவகை கீரோத்தனமாகும். அது அன்றைய சூழலாகவும் இருந்தது. அவ்வாறுதான் அன்றைய இயக்கங்களில் இருந்தவர்களும், தம்மை தாம் காட்டிக் கொண்டனர். மக்களோடு மக்களாக நின்று மக்களை அணிதிரட்ட வேண்டியவர்கள், தம்மை ஒரு மேதாவிகள் போல் காட்டி நடந்தனர். மக்கள் மத்தியில் தாம் உயர் நிலையில் உள்ளவர்கள் போலவுமே, காட்டிக் கொண்டனர். இதன் விளைவலேயே, மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கமறுத்தனர். பலர் இன்றும் இயக்கங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்தன என்று கூறவரலாம். அவர்களின் வேலை முறை, மக்களை போராட்டத்திற்கு ஏற்ப வளர்த்து எடுக்காது, மாறாக உணர்ச்சிகளின் அடிப்படையில் மக்களை திரட்ட முற்பட்டதையே இங்கு குறிப்பிடுகின்றேன்.

அக்காலகட்த்தில் தான் எனக்கு எனது உறவினரில் ஒருவரான சுகந்தன் என்பர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் வேலைசெய்தார். அவர் மூலம் என்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் பெயர்ப் பதிவற்ற அடிநிலை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன்.  ஒரு கொஞ்சக் காலம் எனது ஊரிலேயே துண்டுப் பிரசுரங்களை எடுத்துச் சென்று மக்களிடம் பரப்புகின்ற ஆரம்ப வேலைகளை செய்துவந்தேன். அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களை, மக்கள் மத்தியில் பரப்புவதுடன், அக்கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டேன். அத்துடன் ஆரம்பப் போராளிகளுக்காக நடைபெறும் பாசறைகளிலும், தவறாது கலந்துகொண்டேன்.

இங்கு முக்கியமாக பாசறை பற்றி எனது அனுபவத்தை கூறமுனைகின்றேன். பாசறை என்பது ஆரம்ப தோழர்களுக்கு நடத்தப்படும் அரசியல் வகுப்பாகவே இருந்தது இதில் ஆரம்பமட்ட உறுப்பினர்களை அணிதிரட்டி, அரசியல் முதிர்ச்சி பெற்ற ஓருவரால் அரசியல் வகுப்பு நடத்தப்படும். அங்கு மார்க்சியம், லெனினியம், கருத்துமுதல் வாதம், தேசிய இனப்பிரச்னை, மற்றைய இயக்கங்களை குறைகூறுவது என்ற பதங்களின் கீழ் தான் அதிகமாக அரசியல் வகுப்புகள் இடம்பெறும். இதில் தேசிய இனப்பிரச்சனை குறித்து இன்றைய எனது பார்வையின் அடிப்படையில், அன்று வகுப்பு நடத்தியவர்களுக்கு ஒரு சரியானதும் அத்துடன் இயங்கியலின் அடிப்படையிலான புரிந்துணர்வோ அல்லது விளக்கமோ இருக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு எதிராக போராடவேண்டும் என்பதுடன் மற்றைய இயக்கங்களின் பார்வையில் இருந்து நாம் எவ்வாறு விலகிநிற்கின்றோம் என்பதே அவர்கள் மத்தியில் இருந்து நாம் கற்றுக்கொண்டது. தேசியவாதமானது ஒரு முதலாளித்துவத்தின் அடிப்படையிலேயே உள்ளது என்பதை மறுத்தே, அதை சோசலிச கொள்கைகளுடன் போட்டுக் குழப்பினார்கள். மார்க்சியம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக, தாம் தம் இயக்கத்துக்கு எற்ப எதை மார்க்சியமாக (சோவியத் நூல்களில்) கற்றனரோ, அதை அப்படியே அடிமட்டத் தோழர்களான எங்களுக்கு முன்வைத்தனர். எனக்கு இவர்களின் இச் சொற்பதங்கள் எதுவுமே விளங்கவில்லை. உதாரணத்திற்கு குட்டி பூர்சுவா, லும்பன், போன்ற பாதங்கள். இவற்றை என்னவென்று விளக்கம் கேட்க முடியாது. இப்பாசறை என்பது இரண்டு மூன்று நாட்கள் நடக்கும். சில ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும். இந்த ஒரு வாரத்திலேயே பலர் தமக்கு அரசியல் அறிவு வந்து விட்டது என்று, அவர்களும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுவிடுவார்கள். என்ன பிரச்சாரம் என்றால் தமது கொள்கைகளை விளக்குவதை விடவும், மற்றைய இயக்கங்களை குறைகூறுவதே பிரச்சாரமாக இருந்தது. பிற்காலத்தில் பாசறை என்ற பெயரால் பல தில்லுமுல்லுக்கள் நடத்ததாக, கொக்குவிலைச் சேர்ந்த ஐயுப் என்ற நண்பர் பின்தளத்திற்கு வந்த போது பலரிடம் குறிப்பிட்டார்.

இங்கு இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அரசியல் முதிர்ச்சிபெற்றவர்கள் என்று கூறப்பட்டவர்கள், இன்று தாம் எதை அன்றிருந்த அடிமட்ட தோழர்களுக்கு கூறினார்களோ அதற்கு எதிரான ஆக்கங்களை எழுதுவதுடன் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். உண்மையில் இவர்களின் இந்த சமவுடமை தத்துவத்திற்கான அடிப்படை என்னவென்றால், ஒரு வித கீரோயிசமாகவே இருந்தது.

தொடரும்

No comments:

Post a Comment