Sunday, November 7, 2010

தங்கள் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யாத தீப்பொறி-புளட்டில் நான் - பகுதி-16

 தங்கள் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யாத தீப்பொறி


காந்தன், நோபோட் மற்றும் இவர்களுடன் இருந்தவர்கள், இந்தியாவில் புளட்டின் கொலைகார தலைமைக்கு அஞ்சி கூட்டாக ஒழித்து ஓடி, என்.எல்.எவ்.ரீ. ஊடாக  அடைக்கலம் பெற்றனர். நோபேட்டின் இந்திய வருகையினாலேயே இந்த தலைமறைவு சம்பவம் ஏற்பட்டது. இல்லாவிடின் அது நடந்தேறியிருக்காது.
இங்கு காந்தன் ஏன் எதற்காக நோபெட்டுடன் சேர்ந்து ஓடினார் என்பதற்கு அப்பால், முகாமிற்கு பயிற்சி எடுக்க வருபவர்களில் ஒரு சிலர் பயிற்சியின் கடினத்தாலும், அவர்கள் எதிர்பார்த்து வந்த வகையில் பயிற்சி முகாம் இல்லாததாலும் தப்பி ஓடினார்கள். அவ்வாறு ஓடியவர்களில் பலர் பிடிபட்டு சித்திரவதைக்கு உட்பட்டனர். மீண்டும் கட்டாயமாக பயிற்சியில் இணைக்கப்பட்டார்கள். ஒரு சிலர் சித்திரவதையின் போது மரணமும் எய்தினர். காந்தன் நோபேட் ஏனையவர்களின் தப்பியோட்டத்தின் பின்னர், எவர் தப்பி ஓடினாலும் பிடிபட்டார்களாயின் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. பின்தளத்தில் கழகத்தை விட்டு தப்பித்தவர்களை என்.எல்.எவ்.ரீ. யினர் தளத்திற்கு அழைத்துச் சென்றனர். இவர்களும், அங்கு ஏற்கனவே கழகத்திற்காக வேலை செய்தவர்களும் இணைந்து தீப்பொறி என்ற அமைப்பை உருவாக்கினர். இப்படி தம்மை அடையாளப்படுத்தியவர்கள்,  தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள்.
இவர்களது தலைமறைவுக் காலங்களில் இவர்களுக்கான பாதுகாப்பு முதல் அனைத்து உதவிகளையும் செய்தவர்கள் முன்பு புளட்டில் வேலை செய்த தோழர்களே. குறிப்பாக தளத்தில் இயங்கிய பல தோழர்கள், புளட்டின் செயற்பாடுகள் மீது அதிருப்தி கொண்டு ஒதுங்கி இருந்தனர். இவர்களில் பலர் தீப்பொறியினருக்கு பக்கபலமாக செயற்பட்டனர். அக் காலங்களில் பலர் கழகத்தில் இயங்கிய வண்ணமே, தீப்பொறியினருக்கு தமது ஆதரவினை வெளிக்காட்டினர். பின்னர் தீப்பொறியுடன் இணைந்தனர்.
இவர்கள் (நோபேட், காந்தன்.....) பின்தளத்தில் தப்பியிருந்த காலத்தில்தான், புதியதோர் உலகம் என்ற புத்தகம் கேசவனால் (நோபேட்) எழுதப்பட்டது. அக் காலத்தில் சந்ததியார் ஒதுங்கி இருந்தார். அவர் தனது அரசியற் செயற்பாடாக என். எல்.எவ்.ரீ. யுடன் பேசியபடி இருந்தார். தனது சுயவிமர்சனத்துடன் என்.எல்.எவ்.ரீயில் இணைந்து வேலை செய்வது என்ற நிலைக்கு வந்தடைந்திருந்தார்.
தீப்பொறியினர் தம்மை புதியதோர் உலகம், தீப்பொறி பத்திரிகை-01 போன்றவற்றினை வெளியிட்டு ஒரு அமைப்பு வடிவம் பெற்றனர். புதியதோர் உலகம் நாவலின் மூலமாக புளட்டில் நடந்த பல சம்பவங்களை வெளிக்கொண்டு வந்தனர். அதே போன்று தீப்பொறி பத்திரிகையிலும் புளட்டின் உட்படுகொலைகள் பற்றி அம்பலப்படுத்தினர். இது வரவேற்கத்தக்க விடையமாக இருந்த போதும், இந்த செயற்பாடு அன்றைய காலத்தில் பலரின் உயிர்களை புளட் கொலைக் கும்பல் பறிக்கவும் காரணமாகவும் இருந்தது. சந்ததியாரை கொலை செய்ய இதுவும் ஒரு காரணமாக அமைந்ததெனலாம். புளட்டின் தலைமையிலிருந்த நோபோட், காந்தன் போன்றவர்கள் தப்பிச் சென்று, அமைப்பின் பல விடையங்களை (உட்படு கொலைகளை) வெளிக்கொண்டு வந்திருந்தனர். இதிலும் பார்க்க அதிகமான விடையங்களைத் தெரிந்த சந்ததியாரை உயிருடன் விட்டு வைத்தால், தமக்கு பெரும் ஆபத்தினை விளைவிக்கும் என்ற நிலையிலேயே அவரை கொலை செய்வது என்ற திட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். முன்பு இத்திட்டம் இருந்தாலும் அதை அசட்டையாக விட்டிருந்தனர். இதன் அடிப்படையிலேயே சந்ததியார் கடத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கொலையில் சங்கிலி, இடிஅமீன், வாமன், ...... போன்ற பலர் சம்மந்தப்பட்டனர்.
தீப்பொறியினருக்கு சகலதிலும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருந்தவர்கள் என்.எல்.எவ்.ரீ. யினரே. இவர்கள் தான் பண உதவி உட்பட பலவற்றை தீப்பொறியினருக்கு செய்து வந்தனர். இங்கு ஒரு விடையத்தை முக்கியம் பார்க்கவேண்டும் அதாவது தீப்பொறியினர் தளத்திற்கு வந்ததும், அவர்களுக்கு உதவியவர்கள் கழகத்தில் முன்பு வேலை செய்தவர்களே. அதேபோன்று பல நல்ல சக்திகள், கழகத்தில் இருந்து உட்கட்சி போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை அணுகாது அவர்களை நோக்கி வசை பாடினார்கள். தமிழீழ விடுதலைப் போராளிகள் என்ற தீப்பொறியினரின் பிரசுரத்தில் செல்வன், அகிலன் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதே வேளையில், உட்கட்சி போராட்டத்தை நடத்தியவர்களை கொச்சைப்படுத்தினார்கள்.
காந்தன், நோபேட், ... தலைமையில் இருந்தவர்கள் புளட்டின் அரசியலுடன் சேர்ந்து செயற்பட்டவர்கள். இவர்களுக்கு முரண்பாடு என்பது, அரசியல் ரீதியானதாக இருக்கவில்லை. இவர்கள் தப்பித்தது, தங்கள் இருப்பு சார்ந்த காரணங்களிற்காகவே. இவ்வாறு தப்பித்ததை அரசியல் சாயம் போட்டு காட்டுவது தான் தவறானது. இவர்களுக்கும் புளட்டுக்கும் எந்த வகையான அரசியல் வேறுபாடு இருந்தது என்பதை, அமைப்பில் ஒரு போதும் முன் வைக்கவில்லை. தப்பிய பின் புளட் அமைப்பை மாத்திரம் தாக்கியபடி, பத்திரிகையைக் கொண்டு வந்தார்கள். இதை அதிகமாக விநியோகம் செய்தது புலி தான். புளட் அமைப்பை உடைக்கவும், அதன் செயற்பாட்டை மழுங்கடிக்கவும், புலிகளால் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, தீப்பொறியினரின் பத்திரிகையும் புதியதோர் உலகம் நாவலும் அவர்களுக்கு துணையாக இருந்தது.
இவ்வாறு செயற்பட்ட தீப்பொறியினர், இவர்களை நம்பி பின்தளத்திற்கு வந்த 3000த்துக்கு மேற்பட்ட தோழர்களைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். தாம் மட்டும் இந்த அராஜகத்தில் இருந்து தப்பி பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும் என்றே நினைத்தனர். இவர்கள் தகுந்த முறையில் ஒரு உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலோ அல்லது பழைய தலைமையை மாற்றி அமைக்க முற்பட்டிருந்தாலோ, இவர்களிடமிருந்து தப்பி ஓடிய பின் கொல்லப்பட்ட அண்ணளவாக 150க்கு மேற்பட்ட தோழர்களும், சந்ததியார், அகிலன், செல்வன் போன்றவர்களையும் காப்பாற்றி இருக்கமுடியும்.
புளட்டினுள் நடந்த அராஜகங்களை வெளிக்கொண்டு வந்த இவர்கள், தாம் சேர்ந்து இயங்கிய காலத்தில் மாற்று இயக்கத்தினர்களை கொலை செய்ததைப் பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை அதாவது 06.12.84 அன்று உச் என்பவரும், 14.12.84 சேகர் என்ற ரெலா உறுப்பினர்கள் கழகத்தினரால் படுகொலை செய்யப்பட்;டனர். இதைப் பற்றியோ அல்லது சுழிபுரம் படுகொலை பற்றியோ, கொட்டடி இளைஞர்கள் கொலை பற்றியோ ஏன் மணியம் தோட்டப் படுகொலை பற்றியோ எதையும் இவர்கள் கூறவில்லை. ஏன் என்றால், இவர்கள் இவைகளைப் பற்றி வாய்திறந்தால் இவர்களின் பொட்டுக்கட்டு அம்பலமாகிவிடும் அல்லவா? இதனால் அரசியல் படுகொலைகள் மவுனமாக பாதுகாக்கப்படுகின்றது.
இவ்வாறு எந்த உட்கட்சிப் போராட்டத்தையும் நடத்தாது ஓடி ஒழித்தவர்கள் தான் பிற்காலத்தில் தம்மை ஒரு அமைப்பாக பிரகடனப்படுத்தி செயற்பட ஆரம்பித்தனர். இவர்கள் மேல், புளட்டில் இருந்த பலருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இதற்கு காரணம், இவர்கள் புளட்டின் அராஜகத்தை வெளிக்கொண்டு வந்தவர்கள் என்பதால் சிலர் இவர்களுடன் இணைந்து செயற்பட்டனர். அப்போதும் தமது இருப்பிற்கு ஆபத்து ஏற்படுகின்றது என்று அறிந்ததும், கீழ்மட்ட தோழர்களை அழைத்து உங்கள் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பு என்று கூறி அமைப்பை கலைப்பதாகவும் சொல்லி பகிரங்கமாக அமைப்பைக் கலைத்தனர். ஆனால் மறைமுகமாக தமது பாதுகாப்பையும் பலப்படுத்தி, கொழும்பு சென்று பதுங்கி ஒரு குழுவாக செயற்படலானார்கள். இக்காலத்தில் தான், நோபோட் புலிகளால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கைது என்பது தற்செயலானது என்று இவர்கள் தமக்குள் கதை கூறி வருகின்ற போதும், அதைப் பற்றி எந்தவித தகவலையும் வெளியுலகத்திற்கு கொடுக்காது மௌனமாக இருப்பது பலத்த கேள்விகளை முன்வைக்கின்றது. இவர்கள் தமக்குள் நோபேட்டின் கைது தொடர்பாக தரும் விளக்கம், தமது ஆயுதங்களையும், என்.எல்.எவ்.ரீ. யினரால் கொடுக்கப்பட்ட பணத்தையும் எடுத்து மீண்டும் இயங்க வேண்டும் என்ற ஒரு விவாதம் தமக்குள் ஏற்பட்டதாகவும், அவ்விவாதத்தின் போது பலர் இதை மறுத்த போதும் பெரும்பான்மையின் முடிவிற்கு இணங்க யாராவது ஒருவர் மீண்டும் யாழ் செல்வது என்றும் முடிவுக்கு வந்ததாகக் கூறுகின்றனர். அப்போது அதற்கு ஏற்றவரான நோபேட் தானாக முன்வந்து சென்றார். இவருடன் ஒரு பெண்ணும் சென்றதாகக் கேள்வி. இவர்களை இரண்டு வேறு இடங்களில் தங்க வைத்ததாகவும், அவ்வேளை நோபேட் தங்கிய தீப்பொறியினரின் ஆதரவாளர் வீட்டில் ஒருவர் புலி உறுப்பினர் என்பதால், நோபேட் அங்கு வந்து நிற்பதை புலிகளுக்கு தகவல் கொடுத்ததால் தான் கைது செய்யப்பட்டு புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்றும் கூறுகின்றனர். இதை இவர்கள் எந்த இடத்திலும் வெளிப்படையாக முன் வைக்கவில்லை. இது ஏன் என்ற கேள்வி, பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.
இதே போன்று தீப்பொறியினர் தாம் ஏன் எதற்காக புளட்டில் இருந்து தப்பினோம் என்று முன்வைத்த சுயவிமர்சனம், தம்மிடம் உள்ளதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அதை இன்று வரை வெளியிடவில்லை. தமது அரசியல் நண்பர்களுக்கு மாத்திரம் கொடுத்துள்ளனராம்! இதை வெளியிடுவது அவசியம் இல்லை என்ற போக்கு உள்ளது. தீப்பொறியினரால் பாதிக்கப்பட்டது ஒருவர் இருவர் என்றால் தமக்குள் வெளியிடலாம். ஆனால் தீப்பொறியின் தப்பி ஓடியதினால் பாதிக்கப்பட்டது, ஒட்டுமொத்த புளட்டின் பயிற்சி முகாமில் இருந்தவர்களும் தளத்தில் அரசியல் வேலைகள் செய்தவர்களுமாகும். எனவே தீப்பொறியினரது சுயவிமர்சனம் அனைவரது பார்வைக்கும் வைக்கப்படுவது அவசியமானதாகும்.
நான் முன்பு கூறியது போன்று, இவர்கள் தப்பி ஓடும் வரை முகாமில் இருந்து தப்பியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக இவர்களின் தப்பி ஓட்டத்தின்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு தப்பி ஓட முயற்சித்து பிடிபட்டு கொலை செய்யப்பட்டவர்களில் எனக்கு தெரிந்தவர்கள் ஜிம்மி, கனடா, ......... போன்றவர்கள்.
இவ்வாறு தீப்பொறியினர் தம்மை ஒரு அமைப்பாக வெளிக்காட்டிய போதும், இவர்களுக்கு பல உதவிகளை செய்தது என்.எல்.எவ்.ரீ யினரே. அன்றைய காலத்தில் இடது நிலையில் இருந்த இந்த அமைப்புடன் தான், பல இயக்கங்களில் இருந்து ஒதுங்கியவர்களும் பிரிந்தவர்களும் சேர்ந்து இயங்கினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தாஸ்- செழியன் குரூப் என்.எல்.எவ்.ரீயுடன் இணைந்து இயங்கினார்கள். ஆனால் தீப்பொறியினர் அவர்களிடம் பணம், ஆயுதம் போன்ற பல உதவிகளைப் பெற்ற போதும், அவர்களுடன் சேர்ந்து இயங்கவோ அன்றி ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணையவோ தயாராக இருந்திருக்கவில்லை. இதற்கு நான் கருதும் காரணம் என்.எல்.எவ்.ரீ. யினர் இவர்களிடம் சுயவிமர்சனத்தை எதிர்பார்த்தனர். இதை இவர்கள் செய்யத் தயாராக இல்லாததனால், இது சாத்தியமற்றுப் போனது. இறுதியாக என்.எல்.எவ்.ரீ செயற்பாடற்ற அமைப்பான போது, அதில் இயங்கிய ஜயர் (விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி) தனது பொறுப்பிலிருந்த கணிசமானளவு என்.எல்.எவ்.ரீ பணத்தை தீப்பொறிக்கு கொடுத்து உதவினார்.
இவர்கள் புளட்டில் இருந்த காலங்களில், புளட்டின் மத்திய குழு உறுப்பினராக இருந்த இந்தியர் சேகர் மாஸ்ரர் ஒரு இந்திய உளவாளி என்பது இவர்களுக்கு தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு ஒட்டுமொத்த கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களையும் கொண்ட புளட்டின் மத்திய குழுவில் இருந்த ஒரு சிலர், தீப்பொறியில் அங்கம் வகித்தனர். ஆனால் இவர்கள் புதியதோர் உலகம் என்ற நாவலுக்கு அப்பால், புளட்டின் மீதான விமர்சனத்தை முன்வைக்கவில்லை. அன்றைய காலத்தில் தமது அரசியல் பாத்திரங்கள் பற்றியும் கதைக்கவில்லை. முற்று முழுதாக சந்தர்ப்பவாத அடிப்படையிலேயே இவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதை, இன்று உணர்த்தி நிற்கின்றனர்.

தொடரும்
சீலன்

No comments:

Post a Comment