1984 ஆரம்பப் பகுதியில் பின்தளம் செல்ல விரும்பினேன். ஆனால் முடியவில்லை. அப்போதுதான் என்னுடன் ஒன்றாக ஒரே வகுப்பில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திற்கு சென்றனர். நானும் அவர்களுடன் செல்ல முற்பட்ட போது, என்னை நிற்கும்படியும் தாம் சென்ற பின்னர் வரும்படியும் கூறிச் சென்றனர்.
பின்னர் 19.04.1984 அன்று எனக்குப் பின்தளத்திற்கு செல்ல வாய்புக் கிட்டியது. என்றும் இல்லாதவாறு அன்று என் மனதில் பல சந்தோசக் கனவுகள், படங்களாக வந்து போயின. என்ன! ஒரு மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தளத்திற்கு, அதாவது சொந்த மண்ணுக்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணங்களுடன் எனது ஆயுதப் பயிற்சிக்கான பயணம் ஆரம்பித்தது.
அன்று என்னை சுகந்தன் என்பவர் எனது ஊரில் இருந்து மானிப்பாய்க்கு கூட்டிச்சென்றார் அங்கு எமக்காக காத்திருந்த நேசனிடம் எம்மை ஒப்படைத்தார். அவர் என்னையும் என்னுடன் வந்த முரளி ஆழகன் என்பவரையும் இளவாலைக்கு அழத்துச்சென்றார். என்னைப் போலவே வேறு சில தோழர்களும் இளவாலைக்கு வந்திருந்திருந்தார்கள். எங்களை படகில் ஏற்றினார்கள். நாங்கள் தமிழ் நாட்டுக்கு பயணிக்கின்றோம். எங்களுக்கு ஓட்டியாக வந்தவர் தோழர் பாண்டி. அன்று நாம் பயணித்தபோது கடலில் பலத்த கொந்தளிப்பு. அதனால் குறித்த நேரத்திற்கு கோடியாக் கரையை (கோடிக்கரை) எங்களால் அடைய முடியவில்லை. இரவு முழுவதும் படகை கடலிலேயே தரித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. படகு அலையின் கொந்தழிப்பால் அங்குமிங்குமாக அலைந்து ஆட்டங்காட்டியது. நாம் கடலுக்குள் மூழ்கப் போகிறோமென என் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தது. எமது வாழ்க்கை முழுமையாக முடிந்துவிட்டதெனத் தெரிந்தது. என்ன செய்வதென்று புரியாமல் அந்தப் படகின் ஓர் ஓரத்தில் முடங்கினேன். அழுகை தானாக வந்தது. கடல் அவ்வப்போது எங்களை நனைத்துக்கொண்டது. கண்களும் கரித்தது. அது கடல் நீரா, கண்ணீரா என்பதைப் புரியாத நிலையில் ஏதேதோ நாவிலும் உவர்த்தது. அந்தக் கடல் அலையின் எழுற்சியும், உப்புக் காற்றும், படகின் பயங்கர ஆட்டமும் கலந்து ஏற்படுத்திய மனக் குழப்பத்தால் எனக்கு வயிற்றைக் குமட்டியது. தொடர்ந்து வாந்தியும், சத்தியும் பெருந்தொல்லை தந்தது. அந்த அசதி காரணமாக இருக்கலாம், நான் என்னையும் அறியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.
மறுநாள் காலை, தோழர் பாண்டி எங்களை ஒரு கடற்கரையில் இறக்கினார். அந்தக் கரையோர மக்கள் எங்களைக் கண்டதும், ஆமா… நீங்க விடுதலைப்புலிங்களா! என விசாரிக்க ஆரம்பித்தனர். நாம் ஒன்றுமே பேசாது நின்றோம். தோழர் பண்டியே அவர்களுடன் கதைத்தார். அந்தக் கதைகளெல்லாம் என் காதில் விழுந்தது. இங்கு எல்லோரையுமே விடுதலைப்புலிகள் என்றுதான் அழைக்கிறார்கள் என்பதனை அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால் அதில் ஒருவரிடம் பாண்டி கூறினார், நாம் "முகுந்தன் பாட்டி"..., இவ்வாறு சம்பாசனைகள் நடைபெற்றது. அப்படியே அந்தக் கரையில் நேரம் கழிந்தது. மதியம்போல் எம்மை அழைத்துச் செல்ல ஒரு வண்டி வந்;தது. அதில் எல்லோரையும் ஏறும்படி கூறினார்கள். நாமும் ஏறினோம். இரண்டு அல்லது மூன்று மணிநேர ஓட்டத்தின் பின்னர், ஒரு சிறிய ஊரை அடைந்தோம். அங்கிருந்து பஸ்வண்டி மூலம் எம்மை படுக்கோட்டை என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு நகரம். அங்கிருந்து மீண்டும் தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பஸ்வண்டியில் ஏற்றினார்கள். அந்தப் பயணத்தின் இடையில் நாம் இறக்கப்பட்டோம். அங்கிருந்து சிறு தூரம் நடந்து ஒரு வீட்டை அடைந்தோம். அது இவர்களின் ஒபீஸ் (காரியாலயம்) என்றார்கள். அங்கு பலர் இருந்தனர்.
உள்ளே சென்றதும் எம்மை தனிமைப்படுத்தினர். அப்போது அங்கு வந்த ஒருவர், உங்கள் சொந்தப் பெயர்களை இனி நீங்கள் பாவிக்க முடியாது, புனை பெயர்களைத்தான் பாவிக்கவேணும் என்றார். அப்போது ஒவ்வொருவரும் தங்களின் உறவினர், காதலி, நண்பன் என அவர்களின் பெயர்களை தமது புனைபெயராக வைத்தனர். எனக்கோ எந்தவித அபிராயமும் இல்லாததால், நான் காந்தன் என்று வைக்க உத்தேசித்தேன். சிறிது நேரம் கழித்து, தனித்தனியாக எம்மை ஒரு அறைக்குள் வரச்சொன்னார்கள். அதன்படி ஒவ்வொருவராக உள்ளே சென்று வந்தனர். நானும் உள்ளே சென்றேன். அங்கே எனது சொந்தப் பெயர், ஊர், வீட்டுவிலாசம் என்பவற்றைப் பதிந்தார்கள். எனக்கு சுட்டிலக்கமும் தரப்பட்டது. எனது இலக்கம் 1825 என்றும், எனது புனைபெயர் காந்தன் என்றும், இனி இந்தப் பெயர்தான் பாவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அன்று இரவு அங்கேயே தங்கினோம். மறுநாள் காலை எழுந்ததும், ஒருவர் எம்மை அழைத்தார். இன்று பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் எனக் கூறினார். மதியமளவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அலுமினியக் குவளை தட்டும், காற்சட்டை, பெனியன், போர்வையுடன், படுப்பதற்காக இருவருக்கு ஒரு பாய் எனச்சொல்லி தந்தார்கள்.
பிற்பகல் ஒரு லொறியில் எம்மை ஏறச்சொன்னார்கள். நாம் அதில் ஏறும்போது எமது உடமைகளுடனேயே ஏறினோம். அந்த வண்டியில் சமையலுக்கான பொருட்கள் இருந்தன. அவற்றை கண்டதும் என் மனதில் முதல் குழப்பம் ஏற்பட்டது. வண்டி புறப்பட்டு அரை மணிநேர ஓட்டத்தின் பின்பு, ஒரு சவுக்கு மரக் காட்டை நோக்கி திரும்பியது. அப்படியே சற்று நேரம் ஓட திடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்து, கையை உயர்த்து (ளுவுழுPஇ ர்யனௌ ரி) என்றதும் எனக்கு பயம்பிடித்தது. சற்று நேரத்தில், வாகனச் செலுத்துனரும், நிறுத்தக் கூறியவரும் தமிழில் உரையாடத் தொடங்கியதும் எனது பயம் தணிந்தது. அவர்கள் எமது வண்டியை அனுமதிக்க, வண்டி முகாமிற்குள் நுழைந்தது. நாம் சென்றது இரவு என்பதால் எனக்கு எங்கிருந்து எங்கு வந்துள்ளோம்! என்பது சரியாக தெரியாத நிலையில் எனக்கு எல்லாமே ஒரு விசித்திரமாகவும், பயமாகவும் மனதிற்பட்டது.
அங்கு எம்மை வரவேற்க முகாமின் பொறுப்பாளரும், உதவிப் பொறுப்பாளரும் வந்தனர். நாம் வண்டியால் இறக்கப்பட்டதும் ஓர் இடத்தில் அமரும்படி கூறினார்கள். வண்டியில் இருந்த பொருட்களை இறக்கிய பின்னர் வண்டி புறப்பட்டது. அதன் பின்பு முகாமின் பொறுப்பாளர் தன்னை அறிமுகம் செய்தார். தனது பெயர் மதன் என்றும், மற்றவரைக்காட்டி இவர் தோழர் பாண்டி என்றும் கூறினார். அதன் பின்பு இரவுப் படுக்கைக்கான வசதிகளையும் செய்து தந்தனர். எல்லோருக்கும் போலவே எனக்கும் தளத்தில் இருந்து வந்த பிரயாணக் களைப்பு இருந்தது. அன்றிரவு நான் நன்றாகவே உறங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்து பார்த்தேன். முகாமில் அதிகமானோரைக் காணவில்லை. முகாம் பொறுப்பாளர் எம்மை நோக்கி வந்தார். நீங்கள் காலைக் கடனை முடித்துவிட்டு வாருங்கள் எனக் கூறினார். எமக்கு உதவிக்காக ஒரு தோழரையும் அனுப்பினார். அவர் சவுக்கம் காட்டைக் காட்டி, அங்கு மலம் கழித்துவிட்டு வாருங்கள் என்றார். எனக்கோ என்ன செய்வதென்று தெரியாது திகைத்தேன். என்னை போல் அனைவரும் திகைத்து நின்றார்கள். சற்று நேரத்தின் பின், சிறிது தூரம் நடந்தபின், ஒரு குளாய் கிணற்றைக் காட்டி.., அங்கே முகம் கழுவிவிட்டு வாருங்கள் என்றார். அவ்வாறே செய்து முகாம் நோக்கி திரும்பினோம்.
அவ்வேளையில் காலைப் பயிற்சி முடித்துத் திரும்பிய தோழர்கள், முகாமின் முற்றத்தில் வரிசையாக நின்றார்கள். அப்போது அங்கு முகாமின் மையப்பகுதியில் நின்ற கொடிக் கம்பத்தில், கழகக் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்பு சற்று நேரம் உரையாடினார்கள். திடீரென விசில் அடித்தது. எல்லோரும் கலைந்து சென்றார்கள். மீண்டும் ஒரு விசில் கேட்டது. கோப்பை, கப்புடன் எல்லோரும் ஓடிச்சென்று சமையல் பகுதிக்கு முன்னாக வரிசையில் நின்றனர். நாமும் கோப்பையுடன் சென்றோம். முகாமின் பொறுப்பாளர் அங்கு வந்து, எமக்கே இன்று முதலிடம், உணவை எமக்கு முதல் பரிமாறும் படி கூறினார். அவித்த கடலையும் தேனீரும் தந்தனர்.
தொடரும்
No comments:
Post a Comment