Sunday, November 7, 2010

புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் – புளாட்டில் நான் – 09

புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் –
எத்தனையோ அராஜகங்கள் புளாட் முகாம்களில் நடந்து கொண்டிருந்தது. நாம் இதை புளாட்டின் வளர்ச்சிக்கான, கழக உயர்மட்டத்தினருக்கு முன்வைத்தோம். இதனால் எமது உயிருக்கு ஆபத்து என்றும் உணர்ந்திருந்தோம். தீப்பொறியினரைப்போல தமது உயிர்களுக்கு பாதுகாப்புத்தேடி, கழகத்தில் இருந்து தப்பி ஒடியதைப் போன்று நாம் செய்யவில்லை. மாறாக எமது உயிர்களைப் பணையம் வைத்து இதை செய்தோம். எமது அன்றைய அரசியல் வளர்ச்சிக்கு எட்டியடி, இதை செய்தோம்.
இங்கு முக்கியமாகக் கவணிக்க வேண்டிய விடையம், தீப்பொறியாக கழகத்தில் இருந்து பின் பிரிந்து சென்றவர்கள் நாம் மகஜர் அனுப்பும் காலத்தில் பதவிகளில் இருந்தனர். அவர்கள் தமது விசுவாசத்தை, தலைமைக்கு காட்டிய வண்ணம் இருந்தனர். அத்துடன் இவர்கள் எம்முடன் சேர்ந்து போராடாது, இதை ஒடுக்க முற்பட்ட திட்டத்திற்கும் மறைமுகமாகத் துணைபோனர்கள்.

இவ் மகஜர் எழுதுவதில் முன்னணியாக நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் படுப்பதில்லை. முன்பு எதிரிகளுக்காக முகாமைச்சுற்றி பாதுகாப்பது பணி செய்வது வழக்கம். ஆனால் இந்த போராட்டம் ஆரம்பமானவுடன், கழகத்தினரால் எமக்கு பதிப்பு ஏற்படும் என்று முகாமைச் சுற்றி பாதுகாப்பு போட்டோம். என்ன! எங்களிடம் ஆயதங்கள் இருந்தன? இல்லை, இல்லவேயில்லை மாறாக கோட்டான் தடிகள் தான். இதுவும் எமது முகாமில் அதிகம் இருக்கவில்லை. எமது முகாமில் இன்னுமமொரு கூடாரம் அமைப்பதற்காக, காடுகளுக்குச் சென்று மரங்கள் வெட்டி வைத்திருந்தோம். அந்த மரங்களை தான், நாம் கொட்டான்களாக வெட்டி வைத்திருந்தோம். எமது மகஜரை எடுத்துச் சென்ற ஜிம்மி, உதயன் இருவரும் அதைக் கொடுத்து விட்டு திரும்பி வந்தால், அவர்கள் மீண்டும் ஓரத்துநாட்டுக்கு போக விடுவதில்லை என்றும் அவர்களிடம் கூறினோம்.

இந்த முகாமில் ஓரு முக்கியமான விடையம் கையாளப்பட்டது. எந்த விடையமாக இருந்தாலும், அது பொதுச் சபையில் கூறப்படவேண்டும் என்பதுதான். இதனடிப்படையிலேயே இவர்களிம் திரும்பிப் போக முடியாது என்ற விடயத்தை கூறியிருந்தோம். மகஜரைக் கொண்டு போனவர்கள் வந்தால் தானே! இரவு வழமையாக திரும்பி வருபவர்கள், அன்று வரவில்லை. இதனால் எமக்குள் சந்தேகம் எழுந்தது இரவு நேர ஒன்று கூடலில் இதைப்பற்றி விவாதித்தோம். மறுநாள் காலையில் கூட எந்த எதிர்ப்போ அல்லது தகவலோ தலைமையில் இருந்து வரவில்லை. இதனால் ஒரு சில தோழர்கள் நாம் கொடுத்த மகஜரை இவர்கள் ஏற்றுக்கொண்டு, விவாதித்து நல்ல பதிலை தரப்போகின்றார்கள் என்றனர். இன்னும் சிலர் இல்லை, இவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இவர்கள் எமது முகாமை மூடிவிடுவார்கள் என்றனர். இப்படி கூடலின்போது இதை விவாதித்ததுடன், முகாமை மூடினால் என்ன செய்வது என்ற கோள்வியையும் முன்வைத்தனர். இவர்கள் இதற்கு சரியான பதில் தராத பட்சத்தில், நாம் முகாமைவிட்டு புறப்பட்டு ஊர்வலமாக ஓரத்த நாட்டுக்கு செல்வதென்றனர் ஒரு சிலர். மற்றவர்கள் நாம் தமிழ் நாடு காவல் துறையில் இது தொடர்பாக முறையிடுவது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது இதில் நான் ஊர்வலமாகப் போவது தான் நல்லது என்று விவாதித்தேன். விவாதம் நீண்டதால் வழமைக்கு மாறாக நீண்டநேரம் எல்லோரும் விழித்திருந்தோம். அதன்பின் இவர்களிடம் இருந்து ஒரு கிழமைக்குள் பதில் வராத பட்சத்தில் மட்டுமே ஊhவலம் போவது என்று முடிவிற்கு வந்தோம். நாம் வழமையான இடங்களில் படுப்பதை தவிர்த்ததால், நான் முகாமின் ஒரு மூலையில் சென்று உறங்கினேன்.

யாரோ ஒருவர் காலல் எனது காலை மிதித்து எழும்பு என்றார். நான் எழுந்ததும், நீதானே காந்தன் என்றார். நானும் ஆம் என்றேன். அவரின் கையில் யுமு47 இருந்தது. சரி பெனியனைப் போட்டுக் கொண்டு வா என்று கூறினார். இவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் எம்முகாமை இவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என உணர்ந்தேன். இதனால் எனது பெனியனைக் தேடத் தொடங்க, மறுபடியும் அந்த நபர் கத்தினான். அருகில் இருந்த தோழர் டிஸ்கோவின் பெனியனை எடுத்து போட்டுக்கொண்டு அவருடன் பின் தொடர்ந்தேன். அந்த நபர் என்னை ஒரு வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது சில தோழர்கள் தரையில் குப்புறப் படுத்திருந்தனர். என்னையும் அதில் போய் படு என்றதுடன், ஒருவருடனும் கதைக்கப்பாடது, எனவும் மிரட்டினான்.

அப்போது இதிலை நான் யார் யாருடன் படுத்திருக்கிறேன் என்பது பற்றியும் எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் தலை அசைத்தாலும், பெரிய சத்தத்துடன் தலையை அசைக்க வேண்டாம் என்றனர். இன்னும் ஒருசிலரையும் எமக்கு அருகில் குப்புறப் படுக்குமாறு கூறினார்கள். சில மணித்தியாலங்களின் பின்னர் எம்மை அங்கே நின்ற வண்டியில் ஒவ்வொருவராக ஏற்றினர். முதலில் குப்புறப்படு எனக் கூறியவர்கள், இப்போது இடப்பற்றாக் குறையால் எழுந்து அமர்ந்திப்பதுடன் தலையை குணிந்தபடி இருக்க வேண்டும் என பணித்தார்கள். வண்டி புறப்படத் தொடங்கியது. எம்மைச் சுற்றி நால்வர் காவலுக்கு நின்றனர். இவர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தவர்கள். நான் ஒருவாறு என்னுடன் யார் சேர்ந்து வருகிறார்கள் என பார்த்தேன். எனக்கு அருகாமையில் வி;ஜி என்ற தோழர் இருந்தார் இவர் தேனி முகாமில் பயிற்சி எடுத்தவர். வண்டி குறிப்பிட்ட நேரம் ஓடியபின் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்களை ஒவ்வொருவராக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர். அப்போதுதான் யார் யார் என்னுடன் வந்தார்களென முழுமையாக அறியமுடிந்தது. அதாவது மகஜர் எழுதுவதற்கு முன்னின்றவர்களும், அதில் அதிகமாக கதைத்தவர்களும் தான் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எம்முடன் தோழர் தங்கராஜாவும் இணைக்கப்பட்டிருந்தார். அங்கே எம்மை மீரான்மாஸ்டர் விசாரித்தார். இவர் அன்றைய காலத்தில் வெளி உளவுப்படைக்கு பொறுப்பாக இருந்தார். என்னிடம் அவர் கேட்ட கேள்வி, உனக்கும் புலிக்கும் தொடர்பு இருக்கிறதா? நான் பயந்தவாறு இல்லை என்றேன். அப்படியானால் யாருடைய தூண்டுதலில் இதைச் செய்தாய் என்றார். இது ஒருவருடையதும் அல்ல. இது எமது முகாமில் நாம் கூட்டாக எடுத்த முடிவு என்றேன். நீ எமது இயக்கத்தை ஒழிக்க வந்திருக்கின்றயா? இல்லை என்றேன். உனக்கும் சந்ததியாருக்கும் என்ன தொடர்பு? நான் ஒன்றும் இல்லை என்றேன். என்னை மற்றைய அறைக்கு போகும்படி கூறினார். இவ்வாறு வந்தவர்களில் நாம் ஒன்பது பேரும், ஓர் அறைக்குள் தள்ளப்பட்டோம். அதில் நான், விஜி, அன்ரனி, கே.ஆர். விஜயன், சோசலிசம்சிறி, ஆனந்தன், சண், சலா, ஜெகன் ஆகியோர் மட்டுமே ஆகும். ஏனையோர் அந்த அறைக்குள் வரவில்லை. சிறிது நேரத்தில் அந்த வண்டி ஓட்டுனர், அந்த அறைக்குள் பொருட்கள் எடுப்பதற்காக வந்தார். அவரை வெள்ளை அண்ணை என்று அழைப்போம். அவரை எனக்குத் தெரியும். அவர் என்னை அதற்குள் கண்டதும், ஒரு பரிதாபப் பார்வையுடன் பார்த்தார். ஏன் உனக்கு உந்தத் தேவையில்லாத வேலை எனக்கூறி, தனக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார்.

இன்று புலிகள் தம்மை விமர்சிப்பவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவது போன்று, அன்று அமைப்பை விமர்சித்தவர்கள் புலிகள் என்றனர். அமைப்பை சிதைக்க வந்தவர்கள் என்றனர். இது தான் இவர்களின் சுத்த இராணுவக் கண்ணோட்டமாகும்
தொடரும்

No comments:

Post a Comment