.
தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். இரவானதும், மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அன்றிரவு வாமதேவன், செந்தில், பாபுஜி, மாணிக்கதாசன் இன்னும் இருவர் வந்தனர். வந்தவர்களோ, எம்மை வெளியே வரும்படி கத்தினர். நாங்களோ நடக்க முடியாமல் இருந்ததால், அரக்கி அரக்கி வெளியே சென்றோம். மீண்டும் அடிக்க ஆரம்பித்தனர். வந்தவர்கள் எம்மை மனிதர்களாகவே நினைக்கவில்லை. ஏன் மிருகங்களுக்குக் கூட அன்பு காட்டியிருப்பார்கள் ஆனால் அவர்கள் எம்மை வெறுக்கத்தக்க துரோகக் கும்பலாகவே கணித்தார்கள். அதற்கேற்றாற் போல் ஈவு இரக்கமின்றி எம்மை நடத்தினர். மக்கள் அமைப்பு என்றார்கள், மக்களுக்கான விடுதலை என்றார்கள், மாணவர்களை அணிதிரட்டினார்கள். ஆனால் அதற்காக புறப்பட்டவர்களை கொல்லவும் செய்தார்கள். இதுதான் இவர்களின் விடுதலைப் போராட்டமாகவும் இருந்தது.
என்னை ஒருவன் அடிக்க ஆரம்பித்தது மட்டுமே நினைவிலுள்ளது. எனக்கு நினைவு வந்த நேரத்தில், அந்த முகாமின் சமையல் சாலைக்கு அருகில் படுத்திருந்தேன். என்னருகில் இரு தோழர்கள் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாமதேவன் என்று நினைக்கின்றேன் “இவன் முளிச்சிட்டானா” என்று அவர்களை நோக்கி கேட்க, அதில் ஒருவர் இல்லை என ஆரம்பிப்பதற்கு முதல் மற்றவர் தவறுதலாக ஆம் என்று விட்டார். உடனே வாமதேவன் இல்லை என்ற தோழரை அதட்டி, என்ன “இவனை காப்பாற்றப் பாக்கிறியா” என கேட்டபடி அங்கு வந்து என்னை இழுத்து அடிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றான். அங்கு முதல் நாள் இரவு எமக்கு அடிக்கும் போது காவல் கடமையில் பணிபுரிந்தவர்களே அன்றும் பணிபுரிந்தார்கள். அவர்களில் மனநிலை பாதிக்கப்பட்ட அந்தத் தோழரும் ஒருவர். அவரிடம் தடியை (கொட்டானை) கொடுத்து, எம்மை அடிக்கும் படி கூறுகையில் அவர் அடிப்பதற்கு பதிலாக அலறியபடி அவ்விடத்தை விட்டு வெளியேறினார். அவ்வாறு வெளியேறியவரை விட்டார்களா என்ன(?), மீண்டும் அழைத்து வந்து பயம் தீரவேண்டும் எனக்கூறி எம்முன் நிறுத்தினார்கள். அந்தத் தோழர் முற்று முழுதாக அன்றிரவுடன் தன் சுயபுத்தியை இழந்தார். காவலுக்கு நின்றவர்களை ஒருசிலரிடம் எமக்கு அடிக்கும்படி கூறி, அதற்கு விளக்கத்தை செந்தில் “உங்களிடம் எதிரி சிக்கினால் அவனிடம் பரிதாபம் காட்டாது தண்டிப்பதற்கு இதுவும் ஒரு பயிற்சி” என்றான். அவர்களோ எமக்கு அடிப்பதற்கு விரும்பாதவர்களாயினும், அவர்களின் கட்டளைக்கு இணங்க அடித்தார்கள். ஒரு சில முகாம் தோழர்களிடம் நாம் இயக்கத்தை அழிக்க வந்தவர்கள் என்ற பார்வையும் இருந்தது. இவர்களின் அடிக்கு பின்பு, எமக்கு அடிப்பதற்காக மாணிக்கதாசனுடன் வந்த அந்த ஆறுபேரும் அடித்தார்கள். அப்போது தான் விஜியின் கழுத்தில் மாணிக்கதாசன் அடித்தான். அதனால் அவரின் கழுத்திற்கும் தோள்பட்டைக்கும் இடையிலான எலும்பில் வெடிப்பு ஏற்பட்டது.
என்னை வாமதேவனும் பாபுஜியும் இணைந்து அடித்தது தான், நினைவில் நிற்கின்றது. நான் கண்விழித்த போது பகற்பொழுதாகி இருந்தது. நான் குறண்டியபடி மற்றவர்களோடு கும்பலாகக் கிடந்தேன். அன்றைய பகற்பொழுது பாதி மயக்கத்துடன் சென்றது. அன்று என்னை சிறுநீர் கழிக்க அழைத்துச் சென்ற தோழர்களில் ஒருவர், என்னைப் பார்த்து இது தேவைதானா உங்களுக்கு என வினாவ முற்பட்டார். அதன் போது மற்றவர் “இவர்களுடன் கதைக்க வேண்டாம், கதைத்தால் எங்களுக்கும் இதுதான் கதி” என்றார். அன்று பகல் நான் உணவு உண்டதாக நினைவில் இல்லை. இரவு மீண்டும் அதே மோட்டார் சைக்கிள் சத்தங்கள். அன்று மாணிக்கதாசன் வரவில்லை. அவருக்குப் பதிலாக சசி என்பவர் வத்திருந்தார். வந்தவர்கள் மீண்டும் மீண்டும் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்.
மறுநாள் மதியம் அளவில் மீண்டும் மோட்டார்ச் சைக்கிள் சத்தம் கேட்டது. எனக்கோ அதைக் கேட்டதும் மலம் சலம் தானாகவே வர ஆரம்பித்தது. மாணிக்கதாசனும் வாமதேவனும் வந்தார்கள். எங்கள் மீதான விசாரணை நடத்தப் போவதாக கூறி “நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்கள் வாக்குமூலத்தை தனித்தனியே எழுதித் தரவேண்டும்” எனக் கூறினார்கள். நாம் அரை மயக்கத்தில் இருந்ததால், நாம் அவர்களிடம் என்ன கூறினோம் என்று எதுவும் எமக்குத் தெரியாது. சிறிது நேரத்தால் அவர்கள் சென்றுவிட்டனர். அன்றிரவு; இரவு மீண்டும் மோட்டார் சைக்கிள் வருகைச் சத்தம் கேட்டதுமே, மலசலம் எனது சுயகட்டுப்பாடின்றி வெளிவருவது போல இருந்தது. நான் என்னை காவல் காக்கும் கடமையில் உள்ளவர்களிடம், எனது நிலையைக் கூறினேன். அதற்கு அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் அனுமதி கிடைத்த பின்பே, அழைத்துச் செல்லலாம் என் கூறினார்கள். அவர்களிடம் அதற்கான அனுமதியை எவ்வாறு கேட்பது? அவர்கள் இங்கு வருவதே எம்மை துன்புறுத்துவதற்காகவே. அவர்களுக்கு எனது நிலை நகைப்பிற்கிடமான ஒன்றே ஒழிய, வேறோன்றும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
வந்ததும் வெளியில் வரும்படி சத்தமிட்டு கத்துவார்கள். நாமே பயந்து பயந்து செல்வோம். அதிலும் நான் நடக்கமாட்டேன். எனவே அரைந்து அரைந்து தான் செல்வேன். இதனால் எனக்கு முதல் அடி முதுகில் தான் விழும். வழமை போல “வெளியால வாங்கடா” என கத்தினார்கள். அன்று என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. அரைந்து இரைந்து அவர்களை நோக்கிச் சென்றேன். அதனால் முதல் அடி முதுகில் விழுந்தது. அவ்வாறே விழ மீண்டும் அலறல். அன்று அடிவிழும் நேரம் சற்றுக் குறைந்திருந்தது.
வழமை போல எமது அலறல்களும் கதறல்களும், அந்த முகாமை தன் வசப்படுத்தியது. அவர்களின் தாக்குதலின் உக்கிரமும், சித்திரவதையின் கொடூரமும் குறைந்ததாகத் தெரியவில்லை. எமது கண்ணீரும் கதறலும் அவ்விரணியர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் இன்று வழமையான மூன்று மணித்தியால துன்புறுத்தலுக்கு பதிலாக, இரண்டு மணித்தியாலத்தில் நிறுத்திக் கொண்டனர்.
வாமதேவனும் பாபுஜியும் நாளை காலை வருவோம், எமது வாக்குமூலம் எழுதி முடித்திருக்க வேண்டும் என்று கூறிச் சென்றனர். அதே போன்று மறுநாள். அதாவது ஐந்தாவது நாள். செந்தில் வாமதேவன் போன்றோர் வந்தனர். வந்தவர்கள் “எழுதிவிட்டீர்களா” எனக் கேட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் எம்மால் எழுந்து உட்காரவே முடியாத நிலையில், ஒவ்வொருவரும் சுருண்டு கிடக்கும் வேளையில் எழுதிவிட்டீர்களா என்று கேட்டால் என்ன பதில் கூறுவது? இல்லை என்றோம். உடனே ஒரு உதை. சசி என்பவர், எம்மீதான காவல் கடமைக்கு பொறுப்பாளியாக அன்றிலிருந்து நியமிக்கப்பட்டிருந்தார். சசியிடமே எமது வாக்குமூலத்தை பதிவு செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்காக சசி முகாமில் இருந்த வேறோரு தோழரை நியமித்தார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதை முடிக்குமாறு உத்தரவிட்டதுடன், குறித்த ஒரு நேரத்தையும் அத்தோழருக்கு குறிப்பிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்த தோழர், எமது நிலையைப் பார்த்து விட்டு வாக்குமூலம் எடுக்காது சசியிடம் சென்று தன்னால் எடுக்க முடியவில்லை எனக் கூறி இருக்க வேண்டும். சசி வந்து எம்மைப் பார்த்தார். நாமோ மிகுந்த வேதனையுடன் அங்கிருப்பதைக் கண்டு திரும்பிச் சென்றார்.
அன்று இரவு எவரும் வரவில்லை ஆனால் நாமும் நித்திரை கொள்ளவில்லை. எந்த நேரத்திலும் எம்மை வந்து தாக்கலாம் என்ற பயத்தில், இரவு முழுவதும் கழிந்தது.
எனக்கு மனநிலைத் தாக்கத்தால் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும். இது பிற்காலத்தில் வெகுவாக என்னைப் பாதித்தது. இது தொடர்பாகவும் மற்றைய தோழர்களின் மனநிலை தொடர்பாகவும் வரும் தொடர்களில் கூறுவேன்.
போராட்டம் என்பது மக்களுக்கானதாக இருக்கவில்லை. மாறாக தம்மையும், தமது அதிகார இருப்பையும் பாதுகாத்துக் கொள்வதே, மத்திய குழு உறுப்பினர்களின் குறிக்கோளாக இருந்தது. அதனாலேயே தம்மை மாற்று இயக்கங்களாலும், இலங்கை அரசாலும், ஏன் அமைப்பினாலும் யாராவது வந்து உளவு அறிந்துவிடுவார்களோ என்ற பயத்தாலும் பீதியாலும், முட்டாள்தனமான அரசியலாலும், அன்றைய மத்திய குழு சீரழிந்து இருந்தது. இதன் நிமித்தமே உட்படுகொலைகள் சர்வசாதாரணமாக நடந்தேறியது. புளட்டின் மத்திய குழுவினர் தமது கழகத் தோழர்களுடன் எந்த வகையில் மிருகத்தனமாக இருந்தார்கள் என்பதைவிட, இவர்கள் தான் மற்றைய இயக்கங்களுக்கும் உட்படுகொலை சித்திரவதை செய்யலாம் என வழிகாட்டியவர்களும் கூட. தமிழ் சமுதாயத்தில் உள்ள அனைத்து பிற்போக்குத்தனங்களையும் தலைமையில் கொண்டிருந்த இயக்கமே புளட் எனலாம்.
No comments:
Post a Comment