எமது விடுதலைப் போராட்டத்தில் அண்ணளவாக 34 இயக்கங்கள் இருந்தன. அவற்றில் கணிசமான போராளிகளும் இருந்தன. அவர்களில் பலருக்கு எமது போராட்டம் தொடர்பான கசப்பான அனுபவங்கள் இருந்தன. அவ்வமைப்புகள் மீதான விமர்சனங்களும் இருந்தவண்ணமே இருந்த போதும், இவர்களில் எத்தனைபேர் அதை ஆவணமாகவோ அல்லது விமர்சனமாகவோ பதிவு செய்துள்ளனர்.
இன்று இனியொருவில் ஐயர் எழுத ஆரம்பித்த பிறகு, பலருக்கு தமது நிலைபற்றிய விமர்சனத்தையும் அதிருப்தியையும் எழுதமுடியும் எனறு முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அன்று இருந்த இயக்கங்களில் இருந்த பலர் தமது இயங்கங்களின் உள்முரண்பாடுகளின் காரணமாகவும், புலிகளின் சகோதரப் படுகொலைகள் காரணமாகவும் ஒதுங்கியவர்கள், இன்று தமக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றாற் போல மவுனித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வருகின்றனர். இது ஒருபுருமிருக்க இன்னும் சிலர் 80 களின் பிற்பகுதியில் இருந்து சஞ்சிகைகளை வெளிக்கொண்டு வந்தனர். இதில் பல சஞ்சிகைகள் ஒரே பாணியில் இருந்தன. இவற்றை விட இலக்கியச் சந்திப்பு என்றும், மூன்றாவது பாதை என்றும், இன்னும் ஒரு படி முன்னேறி ஒரு கூட்டு வேலைமுறையை நோக்கி நகர முற்பட்டனர். ஆனால் அவைகள் அனைத்து சிதறி சின்னாபின்னமாக, ஐரோப்பாவில் இருந்து தமிழீழக் கட்சி என்றும், இந்தியாவில் இருந்து தேசபக்கத முன்னணியினர் கழகம் என்ற இரண்டுமே முன்பு சஞ்சிகைகளாக இருந்தவர்களில் கணிசமானோரை உள்வாங்கிக் கொண்டது. இவைகள் செயலற்றுப் போக (இது தொடர்பாக தனிமையில் ஆராயப்பட வேண்டியுள்ளது) இணையத்தளங்கள் உருவாகின. இவற்றின் வளர்ச்சியில் இன்று சிறு சிறுகுழுக்களாக பலர் ஒன்று திரண்டு வருகின்றனர். இருந்த போதும் இதில் பல குழுக்கள் முள்ளிவாய்காலுடன் முடிங்துபோன எமது போராட்டத்தை மீளாய்வுக்குட்படுத்தாது, எங்கு முடிந்ததே அக்கிருந்தே ஆரப்பிக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், மீண்டும் தமிழ் மக்கள் மீது தமது நலன் சார்ந்த பலரால் உருவாக்கப்படும் புதிய அமைப்புகளில் அடாவடித்தனமும், நேர்மையற்ற அரசியல் போக்கையும் கட்டவிழ்த்து விட வழிவகுக்கும். இதனடிப்படையிலேயே நான் எனக்கு நடந்த அனுபவத்தை, எழுத்துருவில் கொண்டுவர முயற்சிக்கின்றேன்.
இந்த வகையில் நான் அங்கத்துவம் வகித்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், மார்க்சியம் பேசிக்கொண்டு எவ்வாறு மக்கள் விரோதப் போக்கை கொண்டிருந்தது என்பதை உணர்த்த முனைகின்றேன். மக்கள் விடுதலையை விரும்பி பயிற்சிக்கு சென்றவர்களை, எவ்வாறு நடத்தியது என்பதை கவனத்தில் கொண்டு வரமுனைகின்றேன். அதேவேளையில் தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த உட்படுகொலைகளுக்கும், ஒட்டு மொத்தத்தில் உமாமகேஸ்வரனை பழிமுடித்து விட்டு தாம் தப்பி;த்துக் கொள்ளும் பலரை, அவர்களின் இயக்க பெயர்களுடன் அம்பலப்படுத்தும் வகையில் இதை எழுத முற்படுகின்றேன். இங்கு கவனிக்க வேண்டியது நான் உமாமகேஸ்வரனை நல்லவன் என்றோ அல்லது அவர் கொலை செய்யவில்லை என்றோ இங்கு கூறவரவில்லை அத்தோடு நடந்த அத்தனை கொலைகளுக்கும் கழகத்தின் செயலதிபர் என்ற நிலையில் அவர்மீது குற்றம் சுமத்தினாலும், இதில் பல கொலைகள் அவருக்கு தெரியாமேலே நடந்தேறின என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதுமட்டுமல்லாது இன்று தம்மை புரட்சியாளர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிவரும் பலர், இச்சம்பவங்களுடன் மறைமுகமாக சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிக்கொணரும் முகமாக, எனக்கு தெரிந்தவற்றை எழுத முற்படுகின்றேன்.
இவர்கள் பலர் தம்மை பற்றிய எந்தவித சுயவிமர்சனங்களும் இன்றி, மக்களுக்கு மீண்டும் ஏதோ ஒருவகையில் தீங்கிழைக்க முற்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டும் எமது போராட்டமானது மக்கள் சார்பில் எவ்வாறு நிலைகொள்ள வேண்டும் என்பதையும், மக்கள் இவர்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தவே, எனக்கு நடந்த கசப்பான அனுபவத்தினுடாக மீளாய்வினை செய்ய முற்படுகின்றேன்.
அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்படுகொலைகள் பற்றியும் அதன் அராஜகப் போக்கு பற்றியும் தோழர் கேசவனால் எழுதப்பட்ட புதியதோர் உலகம் என்ற நூலில் அடங்காத பல விடையங்களை இங்கு ஆராய முற்படுகின்றேன். இதில் புதியதோர் உலகம் தீப்பொறி என்ற அமைப்பால் வெயியிடப்பட்டபோதும், அவ்வமைப்பையும் எனது பாதையில் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றேன். தீப்பொறி அமைப்பானது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து இடைநடுவில் பிரிந்து சென்ற பலரை, உள்வாங்கிய ஒரு அமைப்பாக இருந்தது. இதில் பலர் நடந்த உட்படுகொலைக்கு பதில் கூறவேண்டியவர்களாக இருந்த போதும், புதியதோர் உலகம் என்ற நுலின் மூலம் தமக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என கட்டி தப்பித்தனர். எனவே அவ்நூலுக்கு அப்பால் நடந்தது என்ன என்பதையும், எவ்வாறு தீப்பொறியினர் மற்றைய போராளிகளை விட்டுவிட்டு, தமது உயிரை பாதுகாத்துக் கொண்டனர் என்பதையும் விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தீப்பொறியினர் பிரிந்து செல்வதற்கு முன்பே, இந்தியாவில் முகாம் ஒன்றில் நடந்த உட்கட்சிப்போராட்டம் தொடர்பாக அவர்கள் எதையும் கருத்தில் கொள்ளாது, தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த பலரையும் இங்கு பார்வைக்குட்படுத்துகின்றேன்.
தொடரும்
சீலன்
No comments:
Post a Comment