தோழமைக்கு இலக்கணம் வகுத்த அந்தத் தோழர்களில் ஒருவர், காவற்கடமையில் இருக்கும் போது எம்முடன் கதைத்ததை சசியும் வளவனும் கண்டனர். உடனே அத்தோழரை அழைத்து என்ன கதைத்தாய் என விசாரித்துவிட்டு, அவருக்கு தண்டனை வழங்கினர். முகாமில் உள்ளவர்கள் எம்முடன் கதைத்தால், இவ்வாறு தான் அவர்களுக்கும் நடக்கும் என்று வளவன் முகாம் தோழர்களை எச்சரித்தான். இதனால் ஒரு சில நாட்களாக, முகாம் தோழர்கள் எம்முடன் கதைக்க பயந்தார்கள். இருப்பினும் எம்மை வெளியில் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் எம்முடன் கதைத்தார்கள். இவர்களில் பலரிடம் எமது சொந்தப் பெயர், ஊர் விலாசம் என்பவற்றை கூறிவைத்தோம். காரணம் எம்மை எந்த நேரத்திலும் கொன்று புதைத்து விடுவார்கள் என்ற ஜயப்பாடு, எமக்கு இருந்தது.
இக் காலத்தில் தங்கராஜாவிற்கு இராஜமரியாதை என்று கூறலாம். அவருக்கு அவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு முகாம் பொறுப்பாளருக்கு இருக்கும் வசதிகளை விட, அதிகமாகவே இருந்தது. தலைமையின் விருப்பத்துக்கிணங்க, எம்மையும் சந்ததியாரையும் இணைத்தவர் என்பதனாலோ என்னவோ தெரியாது. இவர் உணவு உண்ட பின் காற்று வாங்க என்று அழைத்தும் செல்வார்கள். ஆனால் நாமோ அடியின் அவதையால் பாதிக்கப்பட்டவர்களாக, படுத்த படுக்கையிலும் நடக்க முடியாமலும் அரைந்தபடியும் இருந்தோம்.
ஒருநாள் மாலை நேரம் முகாமில் பரபரப்பு. சசி, கனடா போன்றவர்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்கள். அவ்வேளையில் எம் எல்லோரையும் எமது கூடாரத்தை விட்டு வெளியில் கொண்டு வந்தனர். காவலர்களின் கண்காணிப்பில் இருந்தோம். அப்போது காவல் கடமையில் இருந்த தோழர் ஒருவர், தங்கராஜா தப்பி ஓடிவிட்டார் என்று இரகசியமாகக் கூறினார். அதில் இருந்த அனைவரும் எழுந்து உள்ளே சென்றனர். ஆனால் என்னால் நடக்க முடியாததால் நான் அரைந்து அரைந்து செல்ல முற்பட்டேன். அப்போது சசி சத்தம் போட்டபடி ஓடி வந்து, "எங்கயடா தங்கராஜா போனவன்" என்று கேட்டு, எனது வலது பக்க தோள்பட்டையில் உதைந்தான். நான் அலறியபடி நிலத்தில் வீழ்ந்தேன். மீண்டும் மீண்டும் என்னை அடித்தான். மற்றவர்களை வெளியில் வரும்படி கத்தினான். வெளியில் வந்தவர்களுக்கு, மிகவும் மோசமாக அடி வீழ்ந்தது. இதனால் எல்லோரும் குழறினோம். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வாமதேவன், செந்தில் போன்றவர்கள் வந்தனர். அவர்கள் எங்கு தங்கராஜா போனான் எனக் கேட்டு, எங்களை போட்டுத் தாக்கினர். அவர்களின் காவலில், தனியே எம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் பிரித்து வைக்கப்பட்டிருந்தவர் தங்கராஜா. ஆனால் அவர் தப்பியதற்கு (இவர்களின் காவலர்கள் தப்ப விட்டதற்கு) எமக்கு அடியும் உதையும் நடந்தது.
தங்கராஜா எவ்வாறு ஏன் தப்பினார் என்ற விடையம், என்னால் பிற்காலத்தில் ஆராயப்பட்ட போது பல திடுக்கிடும் தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். தங்கராஜாவை தப்ப வைத்தது பரந்தன் ராஜன். இவரின் பணிப்பின் பெயரில், பாபுஜியின் உதவியுடன் சசியைக் கொண்டு தப்ப வைத்தனர். தங்கராஜா தப்பிச் சென்றது, சசியுடன் காற்று வாங்கச் சென்ற போது தான். இப் பழி தன் மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காக, சசி எம்மீது பாய்ந்துள்ளான். தங்கராஜாவின் பாதுகாவலராக இருந்த சசி மீது, வாமன், செந்தில் இருவருக்கும் ஒரு சில நாட்களில் சந்தேகம் ஏற்பட்டது. சசியை விசாரணக்கு என அழைத்துச் சென்றனர். என்ன சதி நடந்ததோ தெரியாது, சசியையும் போட்டுத்தள்ளிவிட்டார்கள். இவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சசிக்கும் இந்த நிலையா? என்பதே எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
சந்ததியார் மீதான விசாரணை என்பது தீவிரமடைந்த நிலையில், அவரும் டேவிட் ஐயாவும் அமைப்பை விட்டு ஒதுங்கி வாழ ஆரம்பித்தனர். இதற்காக சந்ததியாரின் செயற்பாட்டை நாம் சரி என்று கூற முடியாது. காரணம் சந்ததியார் பீ (B) முகாமிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அவருக்கு அங்கு நாலாம் மாடி இருப்பது, கட்டாயம் தெரிந்திருக்கும். புளட் அமைப்பின் முக்கிய மத்திய கமிட்டி உறுப்பினரான சந்ததியார், ஏன் இந்த அராஜகங்களை எதிர்த்து உட்கட்சிப் போராட்டம் ஒன்றினை நடத்தாது ஒதுங்கி ஒளித்து வாழ்ந்தாரென்பது புரியாமலுள்ளது. ஒதுங்கலின் பின், இவர் என்.எல்.எவ்.ரீ யுடன் தொடர்புகளை பேணியிருந்ததாக அறிந்தேன். இக் கால கட்டங்களில் அடிக்கடி எம்மை சந்தித்து கதைப்பதற்கு என பலர் வந்து செல்வார்கள். அதில் கண்ணன் (சோதீஸ்வரன் -படைத்துறைச் செயலதிபர்), அவரின் உதவியாளரான காந்தன் போன்றோரும் வந்தனர். இவர்கள் வந்து எமது குறை நிறைகளை விசாரித்து விட்டுச் செல்வார்கள்.
அப்போது தான் உமாமகேஸ்வரனின் தளம் நோக்கிய பிரயாணம் அமைந்திருந்தது. அங்கு சென்ற உமாமகேஸ்வரனும், அவரது சகாக்களும் சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டச் சென்ற 6 இளைஞர்களை கொன்று புதைத்தனர். உமாமகேஸ்வரன் தளத்திற்கு சென்று செய்த வேலை இது ஒன்று மட்டும் தான். இதனால் பாதிக்கப்பட்டவர்களில், ஐரோப்பாவில் தலித்தியவாதியும் இலக்கியவாதியுமான சுகன் என்பவரும் ஒருவர். உமாமகேஸ்வரன் குழுவினர் அந்த ஆறு இளைஞர்களையும் புதைத்துவிட்டு, இந்தியாவிற்கு தப்பி வந்து விட்டார்கள். ஆனால் அப்போது தளத்தில் வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதிகளில், வேலை செய்த பலர் இதனால் பாதிக்கப்பட்டனர். இக்கொலை தொடர்பாக தளத்தில் இயங்கிய பலருக்கு தெரிந்திருந்த போதும், அதை மறுத்து தொடர்ந்தும் மக்களையும் இளைஞர்களையும் ஏமாற்றிய வண்ணம் இருந்தனர்.
புளட்டின் மத்திய கமிட்டியிலிருந்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் உள்ளே நடந்த மற்றும் நடந்து கொண்டிருந்த அனைத்து படுகொலைகளைப் பற்றியும், அராஜகங்கள் பற்றியும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. இதை எதிர்த்துக் கேள்விகள் எழுப்பவோ, போராடவோ அல்லது நாலாம் மாடியை பற்றி எதிர்க்கவேயில்லை. எமது உட்கட்சிப் போராட்டத்தின் நியாயத் தன்மையை உணர்ந்து, அதற்கு சார்பாக போராட அன்று அவர்கள் முன்வரவேயில்லை. மாறாக மழுப்பல் கதைகளாலும், பொய்களாலும் மக்களின் துரோகிகளை பாதுகாத்தனர். இவர்கள் இன்று தாம் ஜனநாயகவாதிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும் கூறிக் கொண்டு, புலிகளின் அழிவின் பின்னர் மீண்டும் மக்களையும் தேசத்தையும் ஏமாற்ற புறப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் இனியொரு இணையத் தளத்தினதும், அசை என்ற சஞ்சிகையினதும் ஆசிரியரான அசோக். இவர் செந்தில் பாபுஜி பரந்தன் ராஜன் போன்ற கொலைகாரர்களுடன் அரசியல் தோழமை கொண்டு அவர்களோடு அவர்களின் கொலைகள் சித்திரவதைகள் பற்றி நன்கறிந்த பின்னாலும் கைகோர்த்து திரிந்தவர். பின்நாட்களில் இந்தக் கொலைகாரர்களின் கூட்டே ஈ.என்.டி.எல்.எவ் வாகி அதன் முக்கிய நபர்களில் ஒருவராக இந்தியசார்பு அரசியலுக்குள் தன்னை இணைத்துக்கொண்டவர். புளட் மத்திய குழுவில் இருந்த இவர் தளமாநாட்டின் பின்னர் பரந்தன் ராஜனுடைய அத்தனை அத்துமீறல்கள் கொலைகள் சித்திரவதைகளையும் தெளிவாக அறிந்திருந்தும் பரந்தன் ராஜனோடு அரசியல் நடாத்தினார். அதன் பின்னால் இன்றைய டக்ளசின் தோழராக வலம் வந்து இன்று இனியொருவுக்குள் நுழைந்துள்ளார்.
(மத்தியில் அசோக் வலதுபுறத்தில் காந்தன்)
இரண்டாமவர் தீப்பொறி ஸ்தாபகர்களில் ஒருவரும், உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரும், தமிழீழக்கட்சி ஸ்தாபகர்களில் ஒருவரும், தற்போதைய மே 18 இயக்கத் தலைவருமான காந்தன். காந்தன் தன்னை ஒரு முற்போக்காளர் எனவும், தான் அராஜகத்திற்கு எதிரானவர் என்ற வகையிலும், பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால் உட்படுகொலை, சகோதர இயக்கப் படுகொலை, உட்கட்சிப் போராட்டத்தை நசுக்குதல் போன்றவற்றை செய்த அமைப்பின், முக்கிய தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் ஒருவர். அவர் இன்னமும் தனது கடந்தகாலம் தொடர்பாக, எந்தவிதமான விமர்சனத்தினையும் வெளியிடாமல் தான், மீண்டும் மக்களை அணிதிரட்ட முயல்கின்றார். அன்று உட்கட்சி ஜனநாயக மறுப்பு, சகோதர இயக்க படுகொலைகள், வதைமுகாம்கள் என்பனவற்றினை எதிர்த்து போராடாது கள்ள மௌனம் சாதித்ததும், மறைமுகமாக அவற்றினை நியாயப்படுத்தியதும் இவர்கள் மேற்கூறிய ஜனநாயக விரோத செயற்பாடுகளை அங்கீகரித்து இருந்தனர் என்பதாகவே அர்த்தப்படும்.
தங்கராஜாவின் தப்பியோட்டத்தின் பின் ஒரு நாள் வாமதேவனும் பாபுஜியும் வந்தனர். எங்கள் எல்லோரையும் "வெளியாலே வாங்கோடா" என அழைத்தான். அவர்களும் மற்றும் காவற் கடமையில் இருந்தவர்களும், எங்களை ஒரு சவுக்கந்தோப்புப் பக்கம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் வாமன் எம்மைப் பார்த்து ஆளுக்கு ஒரு கிடங்கு வெட்ட வேண்டும் என்றான். அது 2 அடி அகலமும் 6 அடி நீளமும் 5 அடி ஆழமும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டான். அவ்வேளை நாம் எங்கள் முகங்களை திரும்ப திரும்ப பார்த்தோம். அன்ரனி வாமதேவனைப் பார்த்து, இது எங்களைப் புதைக்கவா எனக் கேட்டார். உடனே அவருக்கு அதில் வைத்து அடியும் உதையும் கொடுத்தபடி, "ஆம் உங்களைப் புதைக்கத்தான், நீங்கள் எல்லோரும் கழகத்தை அழிக்க, சந்ததியாரோட கூட்டுச் சேர்ந்து சதி செய்தனியள்" எனக் கத்தினான்.
குழிவெட்ட ஆரம்பித்தோம். வேடிக்கை என்னவெனின் எங்களால் சரியாக நடக்கவோ இருக்கவோ முடியாதவர்களைப் பிடித்து, குழி வெட்டும்படி கூறினால் என்ன செய்வது! வெட்ட ஆரம்பித்தோம். எம்மால் முடியவில்லை சற்று நேரத்தின் பின் வாமன் வந்து "என்னடா இன்னும் வெட்டாமல் கதைக்கிறியளா" எனக் கேட்டு கத்தினான். பின்னர் "இன்று தேவையில்லை. நாளை உங்களை கனடா அழைத்து வந்து வெட்ட விடுவான்" எனக் கூறி, மீண்டும் முகாமிற்கு அழைத்துச் சென்றான். மறுநாள் கனடா எம்மை குழி வெட்டும் இடத்திற்கு அழைத்து வந்து வெட்டும்படி கூறினான். எம்மால் மதியம் வரை ஓரு அடி கூட வெட்ட முடியவில்லை. மீண்டும் எம்மை திருப்பி முகாமிற்கு அழைத்துச் சென்றான். கனடாவுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை, அன்று மதியம் எம்மை குழிவெட்ட அழைத்துச் செல்லவில்லை. மறுநாள் காலை கனடா எமது கூடாரத்துக்கு வந்து, "இன்று குழிவெட்ட போகத் தேவையில்லை" என்றான். யாராவது வந்து கேட்டால் "உங்களுக்கு சுகம் இல்லை என்று சொல்லுங்கோ" எனக் கூறி சென்றான். இரண்டு நாள் கழித்து மாணிக்கதாசன் எம்மை சந்திக்க வந்தான். வந்தபொழுது மெதுவாக வாமனால் குழி வெட்ட ஆரம்பிக்கப்பட்ட விடையத்தை கூறினோம். மாணிக்கதாசன் "நீங்கள் குழி வெட்டத் தேவையில்லை. நான் வாமனுடன் கதைக்கிறேன்" எனக் கூறியது, எமக்கு ஒரளவு மன ஆறுதலைக் கொடுத்தது.
இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக் கொல்லப்படுகின்றார். இவருக்கு அனைத்து முகாம்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகின்றது. சில காலங்களின் பின்னர், நாம் சிறை வைக்கப்பட்டிருந்த முகாமில் பயிற்சி எடுத்த தோழர்கள் முகாம் மாற்றப்படுகின்றார்கள். அவர்கள் எம்மை விட்டுப்பிரியும் போது, அதிகமான தோழர்களின் கண்களில் கண்ணீரைத்தான் பார்த்தோம். பல சிக்கல்களுக்கு மத்தியிலும், அதிகமானோர் எம்முடன் உரையாடி தமது பிரிவை கூறினார்கள். அவர்களில் பலர் “பழகிக் கழித்த தோழர்களே நாம் பிரிந்து செல்கின்றோம் எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ” என பாடியபடி, எம்மை விட்டு பிரிந்து சென்றார்கள்.
புதிதாக வரப்போகும் தோழர்கள் எவ்வாறோ, எந்தத் தன்மை கொண்டவர்களோ, என எமக்குள் ஒரு பயம் இருந்தது. அவ்வாறே புதிதாக வந்தவர்களிடம் எம்முடன் கதைக்கவோ பழகவோ கூடாது என, முதல் நாள் ஒன்றுகூடலில் வைத்துக் கூறப்பட்டது. அதே போன்று முதல் வாரம், வந்தவர்களும் எம்முடன் மிகவும் கடுமையாகவே இருந்தனர். இக்காலத்தில் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. எனது ஊரைச் சேர்ந்தவரும் உறவினருமான பிரகாஸ் என்பவர், எமக்கு காவல் காப்பதற்காக வந்தார். அவரைக் கண்டதும் நான் என்னை அறியாது கண்கலங்கினேன். அவரும் அழுதார். உடனே நான் என்னை தெரிந்தவர் என முகாமிற்குள் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று கூறினேன். காரணம் என்னை வைத்து அவருக்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் அல்லவா! அது மட்டுமல்லாது பிரகாஸ் எனக்குத் தெரிய, புலிகளில் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு திரிந்தவர். இவர் எப்படி இங்கே என்ற கேள்வியும், அத்துடன் ஏற்கனவே புலிகளில் வேலை செய்து புளட்டுக்கு வந்த ஆறு தோழர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரிந்ததாலும், அவருடன் தனிமையில் கதைக்க முயற்சித்தேன். மிகவும் கடினமான விடையம். காரணம் நாம் வெளியில் செல்வது என்றால் இருவர் காவலுக்கு வருவார்கள். அதே வேளை என்னைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்ல ஒருவர். அதைவிட காவலுக்கு இருவர், மூவர் வருவார்கள். இவ்வாறு இருக்கையில் எப்படி அவருடன் கதைப்பது. ஒருசில வாரங்கள் கடந்தது. எம்மீதான பரிதாப உணர்வும் எமது பக்க நியாயங்களையும், புதிதாக வந்த தோழர்கள் விளங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். இவர்களிலும் எனது காலுக்கும் தோள் பட்டைக்கும் எண்ணெய் போடுவதற்கு, முல்லத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தோழர் இருந்தார். எவ்வாறு பழைய தோழர்கள் இருந்தார்களோ, அவர்களிலும் அதிகமாவே இவர்களும் எம்மை கவனிக்கப் புறப்பட்டார்கள். எம்மில் எவருக்காவது சுகயீனம் என்றால் போதும், எம்மை மிகவும் ஆதரவாகவும் அவதானமாகவும் கவனிப்பார்கள். எமது தாய் தந்தையர் இருந்தால் கூட, இப்படி கவனித்திருப்பார்களோ தெரியாது.
நான் அதிகம் எமது கூடாரத்தை விட்டு வெளியில் வருவது குறைவு. இரண்டு காரணங்கள். ஒன்று சரியாக நடக்கமாட்டேன். என்னை யாராவது அழைத்து வர வேண்டும். இரண்டாவது ஏற்கனவே வெளியில் வந்து இருந்ததால் தான், எனது தோள்பட்டையிலும் அடி விழுந்தது. இவைகள் ஒருபுறமும், மறுபுறம் எனது மன உளைச்சல் போன்றவை வெகுவாகப் பாதித்ததினால், முகாமில் இருந்த தோழர்களுடன் நான் கதைப்பது மிகக் குறைவு. இக்காலத்தில் வழமைபோல அடிக்கடி செந்தில், வாமதேவன், கண்ணன், பாபுஜி, காந்தன் என மேல் மட்டத்தினர் எல்லோரும் வந்து செல்வார்கள். அடி குறைய ஆரம்பித்தது. வருபவர்கள் எம்முடன் ஓரளவு கதைக்க ஆரம்பித்தனர். நாமும் அவர்களுக்கு ஏற்றாற் போல் கதைக்க தொடங்கினோம். நாட்கள் நகர எமக்கு அடி விழுவது நின்று விட்டது. சாதாரணமாக எமது கூடாரத்தில் இருந்தோம். ஒருநாள் உமாமகேஸ்வரன் முகாமிற்கு விஜயம் செய்தான். அப்போது அவனிடம் நாம் எப்போது விடுதலை செய்யப்படுவோம் எனக் கேட்டோம். அதற்கு ஒரு புன்சிரிப்புடன், எந்தப் பதிலும் கூறாது முகாமை விட்டு வெளியேறினான். இந்த உமாமகேஸ்வரனின் குணாதிசயத்தைப்பற்றி டேவிட் ஐயா முகுந்தனின் மூளைக் கோளாறு (பார்க்க) என்ற தனது புத்தகத்தில் அழகாக வரையறுத்துள்ளார்.
http://www.tamilarangam.net/document/books/book42.pdf
எம்மை முகாமில் வைத்து தாக்கியவர்கள் சாதாரண தோழர்கள் அல்ல. எம்மை மனித நேயமற்று கொடூரமாக சித்திரவதை செய்து அடித்து துன்புறுத்தியவர்கள் வேறு யாருமல்லர் கழகத்தின் தலைமைப்பீடமே. ஒரு விடுதலை இயக்கத்தின் தலைமைப்பீடம் எவ்வாறு அமையக் கூடாது என்பதற்கு, புளட்டின் தலைமைப்பீடம் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
தொடரும்
No comments:
Post a Comment