நான் அறிந்தவரை, புளாட் மதனின் படுகொலையுடன் ஆரம்பமான உட்படுகொலை. இது அவர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. இவ்வளவு காலமும் சமூகவிரோதிகள் என்ற பெயரில் படுகொலை செய்தவர்கள். இன்று ஒரே நோக்கத்துக்காக வந்தவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். இக்காலத்தில் இன்னுமொரு சம்பவமும் நடந்தது.
மானிப்பாய் அல்லது அச்சுவேலியில் இருந்து பயிற்சிக்காக வந்தவர்கள். எனக்கு துல்லியமாக அவர்களின் சொந்த இடம் நினைவில் இல்லை. ஆறு பேர் மாற்று இயக்கம் ஒன்றில் நாட்டில் இருக்கும் போது வேலை செய்தார்களோ அல்லது மற்றைய இயக்கத்தவர்களுடன் பின்னால் ஒரு அரசியலும் இல்லாமல் திரிந்தவர்களோ தெரியவில்லை.
இவர்கள் இந்கு வந்து இறங்கி ஒரு சில நாட்களில் வதைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணம் இவர்களுக்கு முதல் அதே ஊரில் இருந்து வந்த ஒரு தோழர் (அவரின் இயக்கப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை), அவருடன் ஒரு குடிசையில் இருந்த தோழர்களுக்கு இவர்கள் மாற்று இயக்கம் ஒன்றில் வேலை செய்தவர்கள் என்று கூறினார். இதை எவ்வாறோ முகாமினுள் இருந்த “உளவாளிகள்” அறிய, அவர்களை விசாரணை என்று வதைமுகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் திரும்பவில்லை. ஒரு சில நாட்களில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என அறிந்தோம்.
இதற்கு என்ன காரணம்? ஏன் இவ்வாறு நடைபெற்றது? இதை கவணத்தில் கொள்வோமாயின், அதற்குப் பின்னால் தளத்தில் இயங்கியவர்களையே சாரும். அன்று தளத்தில் இயக்கியவர்கள் கூட்டத்திற்கு ஆட்சேர்ப்பது போன்று விடுதலைப் போராட்டத்திற்கும் ஆட்சேர்த்தார்கள் என்பதே உண்மை. ஏற்கனவே ஏதோ ஒரு அமைப்புடன் சம்மந்தப்பட்டவர்கள் என்று அறிந்தோ அறியாமலோ, அவர்களை எந்தவித அரசியல் சார்ந்த தெளிவும் இன்றி இயக்கத்திற்கு அனுப்பிய வண்ணம் இருந்துள்ளார்கள். இது இச்சம்வத்தின் ஊடாக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. இவ்வாறு இயங்கியவர்கள் பலர், இன்று இது தொடர்பான எந்த ஒரு ஆய்வும் அல்லது தாம் அன்று செய்த இத்தகைய தவறுகளை மக்கள் முன் வைக்காது பலர் மீளவும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் தம்மை பாதுகாப்பதற்காக இவை தொடர்பான விடயங்களை கதைப்பதற்கோ அல்லது அவற்றை வெளிக் கொண்டுவருவதற்கோ முடியாதவாறு மறைக்கவும் முயல்கின்றனர். இவர்களின் எந்த அரசியல் இதை செய்ததோ அந்த அரசியல் பற்றிய பார்வை எதுவும் இன்றி உள்ளனர். உமாமகோஸ்வரன், சங்கிலி, மொட்டை மூர்த்தி,....... என மற்றவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு, தப்பவும் செய்கின்றார்கள். என்னை பின்தளத்திற்கு அனுப்பிய சுகந்தன் உட்பட பலர், இவை தொடர்பாக இன்னமும் மௌனம் சாதித்தே வருகிறார்கள். இன்றும் சிலர், இதை சரியான செயல் என்கின்றனர்.
படுகொலைகள் பற்றி அறிய, பயம் அதிகமானது. என்னால் அங்கு பயிற்சி செய்யவோ அல்லது மற்றவர்களுடன் கதைக்கவோ முடியாமல் போனது. இருவர் தொடர்ந்து ஒரு இடத்தில் இருந்து கதைத்தால், உடனே என்ன கதைத்தோம் என விசாரிக்கவும் தொடங்கினார்கள். அதுவே மூவர் அல்லது அதற்கு மேல் என்றால் விசாரனைதான். “மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்றாற் போல, எவர் கூடிக் கதைத்தாலும் இவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்ற என்னமே அங்கு காணப்பட்டது. குறிப்பாக நான், அழகன், முரளி ஆகிய மூவரும், ஒரே ஊரில் இருந்து ஒரே நாளில் பின்தளம் சென்றோம். ஆனால் நாம் மூவரும் தனிமையில் இருந்து கதைக்க முடியாது. எமக்கு ஏற்படும் மனச்சஞ்சலங்களைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், நான் முகாமில் தொடர்ச்சியாக இருக்க முடியாது என எண்ணினேன். அக்காலத்தில் அதிக வெய்யில் ஒவ்வாமை ஏற்பட்டு எனது கண்கள் சிவந்து வீங்கின. அதைக் காரணமாக வைத்து, என்னால் தொடர்ந்து பயிற்சிக்கு வரமுடியாதென அடிக்கடி நின்றேன். இதையடுத்து அப்போது பயிற்சி வழங்கியவர்களில் ஒருவரான சாணாக்கியன் என்பவர், என்னை மீண்டும் ஓரத்தநாட்டுக்கு அனுப்பினார். அவர்கள் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே என்னைப் பார்வையிட்ட வைத்தியர், என்னை மீண்டும் ஒரு மாதத்தால் வரும்படி கூற மீண்டும் என்னை பீ முகாமிற்கு திருப்பி அனுப்பினார்கள்.
நான் சென்ற சிலநாட்களில், தோழர் சந்ததியார் முகாமிற்கு வந்திருந்தார். அவருடன் ஒவ்வொருவரும் தமது குறைகளை கூறினர். அவருடன் கதைப்பதற்கு எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு அவரை நான் கேட்டேன். அவரோ, எனக்குந்தான் நாட்டிற்கு போகவேண்டும் என்று ஆசை. அதனால் தோழரே, நீர் தோழர் முகுந்தனிடம் எனக்கும் சேர்த்து விண்ணப்பியுங்கள் என்றார். இதை கேட்ட எனக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. இவருடன் நாட்டுக்கு போவது பற்றி கதைப்பது அனாவசியமானது என முடிவெடுத்தேன். இருந்தும் எனக்கு பயிற்சி பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு நோயாளியாக விளக்கினேன். அவர் அதை கவணமாக கேட்டார். ஏன் நீர் பயிற்சி எடுக்க முடியாவிட்டால், அரசியல் வகுப்பு எடுக்கலாமே என என்னிடம் கோட்டார். அதற்கு எந்த தயக்கமும் இன்றி சம்மதித்தேன். எனது நோக்கம் இந்த முகாமில் இருந்து வெளியேறுவது தான். அப்போது அவர் அமைப்புக்கு அரசியல் பாசறைகள் நடாத்துவதற்கு உதேசித்துள்ளது. அவ்வாறு அரசியல் பாசறை நடக்கும் பட்சத்தில், உங்களையும் அதற்கு பரிந்துரைக்கிறேன் என்றார். அத்துடன் எனது போராளிக்கான இலக்கத்தையும் பெயரையும் தனது பதிவேட்டில் குறித்துக்கொண்டார்.
ஒரு மாதத்தின் பின்னர் என்னை வைத்தியர் பார்வையிட வேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டதால், அதற்கான திகதி வர நான் மீண்டும் ஓரத்தநாட்டிற்கு சென்றேன். அங்கே பல தோழர்கள் உடல் நலக்குறைவுடன், புதிதாக வந்திருப்பதைக் கண்டேன் எனக்கு ஒரு சில தினங்கள் நின்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரில் கண் பகுதியில் ஒரு சில பருசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டதன் விளைவாக நான் அங்கு தங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் தோழர் சந்ததியாரும் தோழர் தங்கராசாவும் அங்கே வந்தனர். இவர்கள் இருவரையும் இணைத்து ஒரே சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வாய்;ப்பு எனக்குக் கிட்டியது. அதனால் அவர்களிடம் எனது உடல்நிலை தொடர்பான பிரச்சினைகளை மீண்டும் கூறினேன். அத்துடன் எனக்கு அரசியலில் உள்ள ஆர்வத்தையும் தோழர் சந்ததியாரிடம் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டு, புதிதாக ஆரம்பிக்க விருக்கும் அரசியல் பாசறைக்கு செல்வதற்கு, அப்போது அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த பம்மாத்து வாசுவிடம் அதற்கான அனுமதியைப் பெற்றார். அதன் பின்பு நான் பீ காம்புக்குச் செல்லவில்லை. ஓரத்தநாட்டு முகாமில் நடைபெற்ற அரசியல் வகுப்புபில் பயிற்சிபெற ஆரம்பித்தேன்.
No comments:
Post a Comment