இரண்டு நாட்களில் கண்ணன் இந்த முகாமில் இருந்து இடம் மாற்றப்பட்டார். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. ஏனெனில் கண்ணன் வாமதேவனை வழிமறிக்கும் போது அவருடன் நான் நின்றிருந்தேன். மேலும் ஏற்கனவே வாமதேவனுக்கு என் மீது வெறுப்பு இருந்ததாலும், எனக்கு ஏதாவது செய்வார்கள் என்ற பயத்திலும் இருந்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது. ஒரு வாரத்தினுள் என்னை ஒரத்தநாட்டுக்கு வரும்படி அழைப்பு வந்தது. அங்கு சென்றதும் என்னை மீண்டும் பீ முகாமிற்கு பயிற்சிக்கு அனுப்ப உள்ளனர் என்பதனை கலாரூபன் மூலம் (இவர் ஒரத்தநாட்டு காரியாலயத்தில் வேலைபார்த்தவர், என்னுடன் ஒன்றாக கல்வி கற்றவர்) அறிந்து கொண்டேன். இதை உடனடியாக அழகனிடம் தெரிவித்தேன். அழகன் என்னை அழைத்துக் கொண்டு செல்வராஜாவிடம் சென்று, அவரிடம் இது குறித்து கதைத்தோம். அழகன் என்னை தனக்கு உதவியாக இருப்பதற்கு அனுமதிக்குமாறு ஏற்கனவே கேட்டிருந்த விடையத்தைப் பற்றி, அவருடன் கதைத்தார். அதற்கு செல்வராஜா தன்னால் மாத்திரம் எதையும் முடிவெடுக்க முடியாது என்றும், அனைத்துமுகாம் பொறுப்பாளரான சுபாஸிடமும் கதைக்கும்படி கூறினார். அவ்வேளையில் சுபாஸ் ஒரத்தநாட்டில் இல்லை என்பதால் என்னை பீ முகாமிற்கு அனுப்புவதை தள்ளிப் போட்டார் செல்வராஜா.
சுபாஸ் ஒரு சில நாட்களில் பின்னர் அங்கே வந்திருந்தார். அழகன் அவரிடம் தனது உதவியாளராக என்னை வைத்திருப்பது குறித்து பேசியபோது, அவர் மறுப்பு தெரிவித்தார். அதன்பின் அழகனும் அவரும் தொடர்ந்து கதைத்ததற்கு இணங்க, என்னை முதலுதவிப் பயிற்சி பெறுவதற்காக தஞ்சாவூர் வைத்தியக்கல்லுரியில் 15 நாட்கள் பயிற்சி பெற அனுமதித்தார். அப்பயிற்சி முடிந்ததும் என்னை ஒரு முகாமிற்கு முதலுதவியாளராக அனுப்பி வைத்தார் அழகன். தற்போது நான் அழகனின் வைத்தியப்பிரிவில் செயற்பட ஆரம்பித்ததால், என்னைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் அழகனிடமே வழங்கியிருந்தனர். அந்த முகாமின் பெயர் முருகண்டி என நினைக்கின்றேன். அந்த முகாமிற்கு அருகாமையில் தான் பண்னை என்ற ஒரு முகாமும் இருந்தது.
இந்த முகாமிற்கு என்னை செல்வராஜாவே அழைத்துச் சென்றார். நான் அவரிடம் ஏன் என்னை பீ முகாமிற்pகு மீண்டும் பயிற்சி எடுக்க அனுப்புகின்றீர்கள், நான் ஏற்கனவே கொமாண்டோ பயிற்சி முடித்து விட்டேன் என்று, போகும் வழியில் கதையுடன் கதையாக கூறினேன். அவர் உன் மீது வாமனுக்கும் செந்திலுக்கும் அதிக ஆத்திரம் இருக்கின்றது. அதனால் அவர்கள் நீ ஏதாவது ஒரு சிறு தவறு செய்தாலும், அதை காரணமாக வைத்து நாலாம் மாடிக்கு அனுப்பி புதைத்து விடுவார்கள் என்றார். எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. இவ்வாறு எமது உரையாடலுடன் பயணம் தொடர்ந்தது. அவர் மேலும் ஒரு விடையத்தையும் குறிப்பிட்டார். நான் முதலுதவியாளராக இருக்கப்போகும், முகாமில் தான் விஜியும் பயிற்றுனராக இருக்கின்றார். எனவே இருவரும் தேவையில்லாமல் எந்தப் பிரச்சனைகளிலும் சம்பந்தப்பட வேண்டாம் எனவும், இருவரும் தேவையில்லாமல் ஒரு இடத்தில் நின்று கதைக்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.
அந்த முகாமிற்கு சென்றதும் என்னை முகாம் பொறுப்பாளரிடம் அறிமுகப்படுத்தி, எனக்கான வேலைகளையும் அவரிடம் கூறினார். அதன்பின் முகாம் பொறுப்பாளர் மதிய நேர ஒன்று கூடலில் என்னை முகாமில் உள்ள தோழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அங்கு பல விசித்திரமான மனவியாதி உள்ளவர்களை சந்திக்க நேர்ந்தது.
வன்னி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வயதான பெரியவர் பயிற்சிக்காக வந்திருந்தார். அவர் திடீர் திடீரென என மயங்கி விழுவார். புல தடவைகள் அவரை சிகிச்சைக்கு என அழைத்துச் சென்றுள்ளார்கள். அவரின் உடல் சோதனையில் ஒரு நோயும் இல்லை எனக் கூறி, இந்திய வைத்தியர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு அனுப்பியிருந்தனர். ஒருமுறை திடீர் என மயங்கியவரை, தோழர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். அவரது மயக்கம் தெளிந்ததும் வழமைபோல அழத் தொடக்கினார். இது எனக்கு புதிதாக இருந்தது. அவரை நான் தனிமையில் அழைத்து அவருடன் கதைக்க முற்பட்டேன். அவர் எதையும் என்னுடன் கதைக்க தயாராக இருக்கவில்லை. அவரை அவர் பாட்டில் விட்டுவிட்டு அவருடன் நல்ல தோழமையை வளர்த்தேன். குறுகிய காலத்தில் அவரிடம் எனக்கு நடந்தவற்றை கூறினேன். அதன் பின்னர் அவர் என்னுடன் அதிக பாசமாகவும் தோழமையுடனும் இருக்கலானார். அப்போது அவரிடம் ஏன் நீங்கள் இந்த வயதில் பயிற்சிக்கு வந்துள்ளீர்கள் என விசாரித்தேன். அதற்கு அவர் வழமையாக கூறும் இராணுவத்தின் கெடுபிடியால் தமது பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் தான் வந்தேன் என்ற பதிலை கூற நான் ஏற்காது இதற்காகவா என விசாரித்தேன். பின் அவர் தயங்கியபடி அழ ஆரம்பித்தார். தனது மகளை தன்முன்னாடியே வைத்து இராணுவம் பாலியற் பலாத்காரம் செய்ததாகவும், ஆத்திரத்தால் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற வெறியுடன் தான் புறப்பட்டதாகவும் கூறிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார்.
இதுதான் இவர் முதல்முறை தனது மனதினுள் இருந்ததை வெளியில் கூறுவது. இவரின் இந்த நிலை தொடர்பாக நான் அழகனிடம் கூற, அழகன் அவரை அழைத்து மனநிலைப் பகுதிக்கு அனுப்பி குணப்படுத்தி நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
இதேபோன்று ஒரு சிறுவன் அப்போது 16 வயதிற்குள் தான் இருக்கும். அவன் திடீர் என உட்சுவாசத்தை மாத்திரம் செய்வான். ஆனால் வெளிச்சுவாசத்தை அருகாமையில் உள்ள தோழர்கள் அவனது வயிற்றை அழுத்தியபடி செயற்கையாக செய்விப்பார்கள். இந்த சிறுவனின் குடும்பத்தையே இராணுவம் அழித்தது. அதைப் பார்த்ததால் ஏற்பட்ட தாக்கமே. இவ்வாறான விடையங்களைப் பார்க்க எனது மனநிலை இன்னமும் மோசமாகத் தொடங்கியது. இதைப்பற்றி அழகனிடம் குறிப்பிட்டேன். அவர் சிறிதுகாலத்துக்கு என்னை பொறுத்திருக்கும்படியும், தன்னுடன் ஒரத்தநாட்டில் வைத்திருப்பதாகக் கூறினார்.
அவ்வாறே சிறிது காலம் போக அவர் என்னை ஒரத்தநாட்டிற்கு அழைத்து வந்து, ஊர் ஊராகச் சென்று மருந்து சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அப்போது உமாமகேஸ்வரனுக்கு பாதுகாவலராக இருந்த ஒருவர், மன்னாரில் இராணுவத்தால் சூடுபட்டு கோமாவில் இருந்தார். அவருக்கு தளத்தில் வைத்தியம் செய்ய முடியாது என்பதனால், தளத்தில் இருந்து சென்னை அரச வைத்தியசாலையில் சேர்ப்பதற்காக படகின் மூலம் கொண்டு வந்தனர். ஒரத்தநாட்டில் உள்ள அரச மருத்துவமனையில் ஒருவருக்கும் தெரியாது பாதுகாத்தார்கள். அவரை இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால், அவருக்கு முதலுதவி வழங்கும் பொருட்டு நானும் செல்லராஜா, டிரைவர் வெள்ளை அண்ணை, குகன் ஆகியோர் அவருடன் பிரயாணம் செய்தோம். குண்டடிபட்டவரை கவனமாக சென்னை மருத்துவமனையில் ஒப்படைத்து விட்டு திரும்பி, சென்னை காரியாலயத்துக்கு வரும் வழியில் எமது வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் நான் ஒருவன் மட்டும் காயப்பட்டேன்.
உடனே என்னை வைத்திய உதவிக்காக, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இந்த விபத்துப்பற்றி காவல்துறையிடம் பதிவு தேவை எனக் கூற, பெரிய மென்டிஸ் (பாலமோட்டை சிவம்) தான் அதற்காக ஒடித்திரிந்து மற்றைய வேலைகளைக் கவனித்தார். இதை அறிந்த அழகன் உடன் சென்னை வந்தார். மறுநாள் என்னை தன்னுடன் ஒரத்தநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அக்காலங்களில் நான் தொடர்ந்தும் பலரைச் சந்திக்க நேரிட்டது. ஒரு தடவை நான் ஒரத்தநாட்டில் அன்ரனியை மீண்டும் சந்தித்தேன். அவருடன் நான் அதிகம் கதைக்கவில்லை. இதற்கு காரணம் யார் யாருடைய ஆளாக இருக்கின்றார்களோ என்ற பயமே. அக்காலத்தில் தான் தளத்தில் இருந்து பஜிரோ ஜீப்வண்டி ஒன்றைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். இதைவிட பாலஸ்தீன பயிற்சி எடுத்த நபர் ஒருவர் (இவரின் பெயர் தவிர்க்கப்படுகின்றது) தளத்தில் இருந்து கடத்தப்பட்ட 400 சீசீ மோட்டார் வண்டியில், பெண்கள் முகாமிற்கு சென்று வருவார். அவருக்கும் என்னைத் தளத்தில் இருந்து வந்து சந்தித்த அந்தப் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. போராட்டத்துக்கு பயிற்சிக்காக புறப்பட்ட இவர்களுக்கு காதல் மலர்ந்ததை, எனக்கு பெண்கள் முகாமில் பயிற்சி பெற்ற பெண் தோழர் ஒருவர் அறியத்தந்தார். இந்த 400 சீசீ பேர்வழியைப் பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்தேன். இவரோ பெரிய மன்மதன். தனது மன்மதலீலைக்காகவே இந்த காதல் நாடகம். இதை என்னை சந்தித்த அந்த பெண்ணிடம் குறிப்பிட்டேன். அதை ஏற்க அவர் மறுத்தார். பின்னர் நான் கூறியபடியே நடந்தேறியது. பின்னர் அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவரானார்.
இவ்வாறு பெண்கள் முகாம் ஒன்றை அமைத்து அதை தமது வக்கிரங்களுக்கு உள்ளாக்கத் துடித்தவர்கள் பலர் உண்டு. இந்த பெண் தோழர்களோ தமது போராட்ட உணர்வை வெளிப்படுத்த புறப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் வந்த இடமோ, விலங்குகளின் கைகளுக்குள். பெண் போராளிகள் என்னும் போது புளட்டில் அதிகம் பேசப்பட்டவர் ஒருவர். இவரை சிலர் ரிவோல்வர் ரீற்றா என்றும் அழைப்பார்கள். இவர் தலைமையுடன் இணைந்து அத்தனை கொடுமைகளிலும் அட்டூழியங்களிலும் சம்பந்தப்பட்டவர் என்றே கூற வேண்டும். இவரின் உதவியுடன் தான், ஒருவர் மீது பாலியல் பலாத்கார பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பெண் விடுதலை என்றும், பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்றும் வாய்கிழிய பேசிய போதும், பெண்களை எவ்வாறு நடத்தக் கூடாதோ அதனை விடவும் மிகவும் கேவலமாக நடத்தினார்கள். இதனை அரங்கேற்றுவதற்கு தலைமையுடன் இணைந்து செயற்பட்ட ஒரு சிலபெண்களும் துணை புரிந்தனர் என்பது தான் உண்மை.
தொடரும்
தொடரும்
No comments:
Post a Comment