கமாண்டோ பயிற்சியை முடிந்ததும் நாம் வேறு முகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டோம். அது பீ காம்பிற்கு அருகாமையில் ஒரத்தநாடு என்ற இடத்தில் இருந்தது. இங்கு பயிற்சி என்பது எமக்கு இருக்கவில்லை. சுயமாக பயிற்சிகளைச் செய்வதுடன் சில விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அங்கு கராட்டி, லொக்ஸ், சிலம்படி போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. இக்காலத்தில் நான் உமாமகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பத்திரமானவர் என்ற நடிப்பை மிகவும் கவனமாக செய்து வந்தேன். நானும் விஜியும் ஒரு முகாமில் இருந்தாலும் இருவரும் அதிகம் கதைப்பது கிடையாது. மறைமுகமாக எமக்குள் சம்பாசணைகள் நடைபெற்றும். வெளிப்படையாக கதைப்பது இல்லை. ஒரு சில காலங்களில் விஜி பயிற்றுனராக வேறு ஒரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான் மாத்திரம் அங்கிருந்ததால் என்னால் எளிதாக இவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக நடிக்க முடிந்தது. அழகனுடன் (அனைத்து முகாம்களின் மருத்துவப் பொறுப்பாளர்) எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது. இவர் மூலம் நானும் இம்முகாமில் இருந்து மாறி வேறு முகாமிற்கு செல்ல முயற்சிகளை மேற்கொண்டேன். எமது முகாமில் ஒரு வழக்கம் காணப்பட்டது. அது சுந்தரத்தின் படத்தையும் உமாமகேஸ்வரனின் படத்தையும் கழுத்தில் தொங்கவிடுவது. இதை நானும் செய்தால் எனக்கு பாதுகாப்பு என்பதாலும், இவர்களின் நம்பிக்கைக்குரிய ஆளாக மாற முடியும். இதனால் கழுத்தில் தொங்கவிடும் படங்களை கொண்ட சங்கிலியினை, அழகனின் உதவியுடன் நான் பெற்றுக் கொண்டேன். என்னை அவர்கள் நம்பவும் தொடங்கினர்.
இதன் வெளிப்பாடாக எமது முகாமிற்கு தண்டனை காரணமாக வந்திருந்த மொட்டை ரவியுடன் (இவர் கந்தசாமியின் வலது கரம்) நல்ல தொடர்பை ஏற்படுத்த முடிந்தது. இதன் காரணத்தால், அவரிடமிருந்து என்னால் பல முக்கியமான அமைப்பு விடையங்களை அறியக் கூடியதாக இருந்தது. இவர் கூறிய பல விடையங்களை முன்னைய பகுதிகளில் பார்த்திருந்தேன். இவரின் மூலம் தான் உமாமகேஸ்வரனிற்கும் பரந்தன் ராஜனிற்குமான முரண்பாட்டையும் அறிய முடிந்தது. இவரை சந்திப்பதற்காக கந்தசாமி அடிக்கடி எமது முகாமிற்கு வருவது உண்டு. அவருடனும் என்னால் இலகுவில் கதைக்கவும் முடிந்தது. முக்கியமாக நான் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவன் என்பதாலும், வெங்கட்டுடன் ஒன்றாக படித்தவன் என்பதாலும், பலதடவைகள் என்னை தன்னுடன் இணைந்து வேலை செய்யும்படி கந்தசாமி அழைத்தார். நான் அதை மறுத்தேன். இதை அழகனுக்கு தெரியப்படுத்த, அவர் தனது பொறுப்பில் என்னை எடுப்பதாக கூறினார். எமது முகாமில் முதல் உதவி வழங்குவதற்கு பொறுப்பாளராக இருந்தவருடன் தொடர்பு கொண்டு, என்னை அவருக்கு உதவியாளராக பணிபுரிய செய்தார். இதை மறைமுகமாக செயற்படுத்தியவர் தோழர் செல்வராஜா. இன்று புளட்டில் பின்தளப் பயிற்சிக்கு வந்து பலர் உயிர் தப்பி இருக்கின்றனர். என்றால் இந்த வகையில் உதவியவர்களில், முதலாவது தோழர் செல்வராஜாவையே அது சாரும். இவர் அனைத்து முகாம் உதவி பொறுப்பாளராக கடமையாற்றியபடி, தலைமைக்கு விசுவாசியாக நடித்தபடி பலரைக் காப்பாற்றினார். அதே போன்று தான் அழகனும். இவர்கள் தமக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நின்று, பலரைக் காப்பாற்றினார்கள்.
அன்றைய சூழலில் தீப்பொறியினர் தப்புவதைத் தவிர, வேறு எந்த வழியும் இல்லை என பலர் இன்று முணுமுணுக்கின்றனர். ஆனால் செல்வராஜா, அழகனைப் போன்று பலர், முகாமில் இருந்த தோழர்களை புளட்டின் கொலைப்பிடியில் இருந்து தப்பவைத்தனர். இவர்களிடமும் மாற்றுக் கருத்துதான் இருந்தது. ஆனால் அவர்கள் தோழர்களை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக அமைப்பிற்குள்ளேயே நின்று, மற்றைய தோழர்களை காப்பாற்ற பாடுபட்டார்கள்.
இக்காலத்தில் திடீர் என என்னை ஒரத்த நாட்டிற்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்தது. நான் மிகுந்த பயத்துடன் அங்கு சென்றேன். அங்கே என்னை சந்திக்க ஒருவர் காத்திருப்பதாக கூறினார்கள். யார் என்று எனக்கு கூறவில்லை. அங்கு சென்ற போது எனக்கு தெரியாத ஒரு பெண் என்னை சந்திப்பதற்காக காத்திருந்தார். தான் பயிற்சிக்காக வந்ததாகவும், எனது வீட்டாருடன் நல்ல தொடர்பில் இருந்ததாகவும் கூறினார். அவர் மூலம் எனது வீட்டாரின் சுகநலன்களை அறிந்து கொண்டேன். என்னை இவர்கள் புதைத்து விட்டார்கள் என்ற கருத்து உலாவியதால், அது உண்மையா இல்லையா என அறிவதற்காகத் தான் இந்தச் சந்திப்பு என்றும் கூறினார். எனக்கு இங்கு நடந்த விடையம் பற்றி ஒரளவு வீட்டாருக்குத் தெரியும் என்றும், இதனால் அவர்கள் கவலையில் உள்ளனர் எனத் தெரிவித்தார். முகாம் திரும்பி அழகனிடம் இது பற்றி கூறினேன். அவர் நானும் அவரும் ஒன்றாக நின்று படம் எடுத்து, அதனை எமது வீட்டாருக்கு எனது கைப்பட எழுதிய கடிதத்தையும் வைத்து இரகசியமாக அனுப்பிவைத்தார்.
என்னை பின்தளத்திற்கு அனுப்பிய சுகந்தன் என்பவர் பின்தளம் வந்து, சென்னை சென்று விட்டதாக அழகன் மூலம் அறிந்தேன். சுகந்தன் ரெசோ அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ரெசோ அமைப்பு இது புளட்டின் ஒரு மாணவரமைப்பாக இருந்த போதும், அது முற்று முழுதாக புளட்டின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை மாறாக சுயாதீனமாக இயங்கியது குறிப்பிடத்தக்கது. (சுகந்தன் என்பவர் இதுபற்றி முழு வரலாற்றையும் பதிவுக்கு கொண்டுவரமுடியும். இதை அவர் செய்வார் என எதிர்பாக்கின்றேன்.) இவ்வளவு நெருக்கடியான காலத்தில் இவர் இங்கு வந்துள்ளார் என்றால், என்ன காரணம் என பல கேள்விகள் எனக்குள் எழுந்தது. இவரும் உமாமகேஸ்வரனின் ஆளாகத் தான் இருக்க முடியும் என முடிவெடுத்தேன். இதனால் இவரை நான் சந்திக்க முயற்சியேதும் எடுக்கவில்லை. பின்னர் ஒருநாள் இவர் என்னை சந்திப்பதற்காகவும்;, துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் நோக்குடனும் மாணிக்கதாசனால் எமது முகாமிற்கு அழைத்து வரப்பட்டார். உண்மையில் எம்மை ஏமாற்றி திசைதிருப்பவே, சுகந்தனுக்கு துப்பாக்கி சுட பயிற்சி என்ற நாடகத்தை நடத்தினர். இவரைக் கண்ட நான் சந்தோசத்துடன் கதைத்தாலும், இவர் இந்த கொலைகாரக் கும்பலில் ஒருவர் என்ற எண்ணத்திலேயே எனது உரையாடல் இருந்தது. மாணிக்கதாசன் துப்பாக்கி சுடும் பயிற்சி மூலம் எம்மை ஐயுற வைத்தது. அப்போது சுகந்தனிடம் என்னை எப்படியாவது தளத்திற்கு அனுப்பும்படி, உமாமகேஸ்வரனிடம் கூறும்படி வேண்டி நின்றேன். சுகந்தனோ துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ஆனால் அவர் என்னையும் சந்திக்கத்தான் இலங்கையில் இருந்து வந்தார் என்பதை நான் உணரமுடியாத வண்ணம், என்னை அவர் மேல் சந்தேகிக்க வைத்தனர்.
இவ்வாறு என்னை சந்தித்தவர்களையே சந்தேகம் கொள்ள வேண்டிய நிலையில் தான், நான் மற்றவர்களுடன் பழகினேன். போராட்டம் என்று புறப்பட்ட இவர்கள், இந்தியாவில் திரைப்பட கீரோக்களிலும் பார்க்க வசதியாக கீரோயிசத்துடனும் வாழ்ந்தார்கள். இலங்கையில் இருந்து போராட்டத்திற்கு என பறிக்கப்பட்ட கொண்டா 400 சீசீ மோட்டர் சைக்கிள், 200 சீசீ மோட்டார் சைக்கிள் போன்றவற்றுடனும், பஜீரோ பச்சை நிற ஜீப்பிலும் தான் இவர்களின் போராட்டம் இருந்தது. அக்காலத்தில் இந்தியாவில் இவ்வகையான வண்டிகள் இல்லை. இவர்கள் இதில் பிரயாணம் செய்யும் போது, தம்மை கீரோக்கள் போன்றே காட்டிக் கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிற்கான போராட்டத்தை கைவிட்டு, சுகபோக வாழ்க்கையில் மிதந்தார்கள் என்றே கூறலாம்.
இந்த முகாமில் முக்கியமாக இரண்டு வேலைகள் தான் இருந்தன. ஒன்று அதிகாலையில் பீ முகாமைச் சுற்றி பாதுகாப்பது. அதாவது புதிதாக பயிற்சிக்கு என வருபவர்கள் தப்பி ஓடாமல் பார்த்துக் கொள்ளுதல். பீ முகாமில் இருந்து தப்பி ஓடிவருவபர்களை பிடித்து, பீ முகாமில் உள்ள மொட்டை மூர்த்தியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதை எமது முகாம் தோழர்கள் செய்வதில்லை. மாறாக தப்பி ஓடிவருபவர்களை பிடித்து, இவ்வாறு முகாமில் இருந்து தப்பி ஓடினால் என்ன பாதிப்பு நடக்கும் என விபரித்து மீண்டும் முகாமிற்கு போகும்படி கூறி அனுப்பி வைப்பார்கள். இரண்டாவது வேலை பெண்களின் பயிற்சி முகாமிற்கு பாதுகாப்பு கொடுப்பது.
இந்த பெண்களின் பயிற்சி முகாமில் 80க்கு மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தலைமையின் (உமாமகேஸ்வரனின் சகாக்கள்) கீழான கட்டுப்பாட்டிலேயே இயங்கினர். அனைத்து முகாம் பொறுப்பாளருக்கும், இந்த முகாமிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் இந்த முகாமை பாதுகாக்கும் பொறுப்பு, நான் இருந்த முகாமிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் பயிற்சியை மேற்பார்வையிட அடிக்கடி கண்ணன், கந்தசாமி (சங்கிலி) போன்றோர் அங்கே போய் வருவார்கள். கண்ணன் (இவர் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர்) இந்த பயிற்சி முகாமில் எமக்கு பொறுப்பாகவும், அதேவேளை முகாமின் பாதுகாப்பு, பீ முகாமின் பாதுகாப்பு, பெண்கள் பயிற்சி முகாமின் பாதுகாப்பு போன்றவற்றிற்கும் பொறுப்பாளராக இருந்தவர். ஒரு முறை இவருடன் நானும் பாதுகாப்புக் கடமையை சுற்றிப் பார்க்கும் கடமையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மாலை நேரம். நாம் பெண்கள் முகாமிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பில் இருந்த தோழர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், முகாமை நோக்கி மோட்டார் சைக்கிள் வருவதை அவதானித்தோம். மோட்டார் சைக்கிள்; சத்தம் கேட்டதும் வழமையான எனது பிரச்சனை என்னைத் தாக்க, நான் பக்கத்தில் இருந்த காட்டை நோக்கி சென்றேன். அந்த மோட்டார் சைக்கிளில் வாமதேவனும் மற்றைய ஒருவரும் வந்திருந்தனர். அவர் பெயர் தற்போது ஞாபகம் இல்லை. வந்தவர்களை வழிமறித்த கண்ணன், ஏன் எதற்கு எங்கே செல்கின்றீர்கள் என்ற வழமையான கேள்வியை முன்வைத்தார். அவ்வேளையில் நானும் அவர்களுடன் இணைந்தேன். இதற்கு சரியான பதில் கூற முடியாதவாறு வாமதேவன் தடுமாறி, தனது பாணியிலான மிரட்டலை ஆரம்பித்தார். எதற்கும் பயப்படாத கண்ணன், இறுதிவரை அவர்களை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. உமாமகேஸ்வரனின் உத்தரவு இல்லாமல் செல்ல முடியாது என மறுத்தார். கண்ணனின் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறாது தான் உள்ளுக்குள் செல்ல வேண்டும் என, வாமதேவன் வாதாடிக் கொண்டிருந்தான். உட்செல்லவிடாது வழிமறித்தபடி தொலைத் தொடர்பு சாதனத்தின் ஊடாக ஒரத்த நாட்டில் உள்ள அனைத்து முகாம் பொறுப்பாளரை தொடர்பு கொண்டார் கண்ணன். அவரிடம் இவ்விடையம் பற்றி தெரிவித்தார். தனக்கும் இவரின் பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை என, அனைத்து முகாம் பொறுப்பாளர் கூறினார். இதையடுத்து அவர்கள் உட்செல்வதை அடியோடு மறுத்த கண்ணன், இவர்களை திரும்பி அனுப்பினார். அப்போது வாமதேவன் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் என்று, மிரட்டலுடன் திரும்பிச் சென்றான்.
புளட்டின் போராட்டம், அன்று தமிழ் மக்களுக்கானதாக இருக்கவில்லை. மாறாக சுகபோகங்களை அனுபவிப்பதற்கான போராட்டம் என்ற பெயரில் இயக்கமொன்று நடத்தப்பட்டது. சீரழிந்து குட்டிச் சுவராகிக் கொண்டிருந்த வேளையிலும் பயிற்சிக்காக தளத்தில் இருந்து பெண்களை அனுப்பி வைத்தனர். இது தளத்தில் புளட்டுக்காக வேலை செய்த தலைமைப்பீடத்தினரின், பின்தள தலைமை விசுவாசத்தினையே எடுத்துக் காட்டுவதுடன் அவர்களின் மக்கள் விரோத அரசியலையும் தெளிவாக்கியது.
தொடரும்
சீலன்
நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18)சீலன்
No comments:
Post a Comment