Sunday, November 7, 2010

பெண் போராளிகளை அச்சுறுத்தி மிரட்டிய ரிவால்வர் ரீற்றா - (புளட்டில் நான் பகுதி 19)

நம்பிக்கைக்குரிய ஆளாக நடிக்க, சுந்தரத்தினதும் உமாமகேஸ்வரனினதும் படத்தை கழுத்தில் தொங்கவிட்டேன் (புளட்டில் நான் பகுதி 18)

உமாமகேஸ்வரன் விசுவாசிகள் போன்று நடிக்கக் கோரினர், நடித்தோம்-புளட்டில் நான் பகுதி – 17

தங்கள் கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யாத தீப்பொறி-புளட்டில் நான் - பகுதி-16

காந்தன் தப்பியோட, நாம் அடிவாங்குகின்றோம் -புளட்டில் நான் பகுதி - 15

எம்மை புதைக்க, நாம் வெட்டிய குழி -புளாட்டில் நான் பகுதி 14

சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்று எழுதித் தருமாறு கூறினர் -புளாட்டில் நான் பகுதி - 13

  சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இது நடந்தது என்று எழுதித் தருமாறு கூறினர்      

மறுநாள் மதியமளவில் மாணிக்கதாசனும், செந்திலும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளின்; சத்தம் கேட்டதும், எனக்கு வழமையான பாதிப்பு ஏற்பட்டது. சந்ததியாரை இது தொடர்பாக விசாரித்து விட்டுத்தான் வருகின்றோம் என்று எம்மிடம் கூறினர். எமக்கோ மரண பயம் பிடித்தது. ஏனெனில் நாம் மலைபோல நம்பியிருந்த சந்ததியாரையும், இவர்கள் பிடித்து விசாரிக்கின்றார்கள் என்னும் ஆச்சரியமும் தான். அவருக்கே இந்த நிலை என்றால் எமக்கு? என்ற கேள்வி எனது மனதை வெகுவாக குழப்பமடைய வைத்தது. மேலும் தங்கராஜா இதற்கெல்லாம் காரணம் சந்ததியார் என ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் கூறினர். எமக்கு கடிதமெழுதிய செயற்பாடு சந்ததியாரின் வழிகாட்டுதலின் பேரிலேயே நடந்தது எனவும் கூறினர். நாம் எல்லோரும் மௌனமாக இருந்தோம். அவர்கள் கூறியதில் உண்மை இல்லை என்பதால், திடீர் என ஒரு தோழர் அப்படி இல்லையென மறுத்தார். உடனே மாணிக்கம்தாசன் அப்படி என்றால் என்ன நடந்தது என்று எழுதுங்கோடா என அதட்டினான். சரி என்றோம். முகாமில் இருந்து ஏற்கனவே எமது விடயத்தை எழுதவென அனுப்பிய தோழரை மீண்டும் அனுப்பினால், நாம் கூற அவர் எழுதுவார் எனவும் கூறினோம். அதற்கு அவர்கள் இணங்கினார்கள். இருந்தபோதும் எமது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டிய தோழர் அன்று பகல் முழுவதும் வரவில்லை.
அன்று இரவு மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம். எல்லோரும் எழுந்து உட்கார்ந்தோம். வாமதேவன் பாபுஜி மற்றும் இருவர் வந்திருந்தார்கள். அவர்கள் எங்களை நோக்கி வாங்கோடா வெளியாலை என சத்தமிட்டனர். என்ன சந்ததியார் இதுக்கு காரணம் இல்லை என்று சொன்னியளாம் என கத்தியபடி, அடிக்கத் தொடங்கினார்கள். எம்மாலோ அடிவாங்க முடியாத நிலை. எல்லோரும் கதறி அழுதோம். பின்பு எம்மை இழுந்து வந்து கூடாரத்துக்குள் போட்டார்கள். மேலும் நாளைக்கு நீங்கள் இதற்கு எல்லாம் சந்ததியார் தான் காரணம் என்று செல்ல வேண்டும், எனக் கூறிவிட்டுச் சென்றனர்.
மறுநாள் காலை வாக்குமூலமெழுதும் தோழர் வந்திருந்தார். நாம் இயலாது இருந்தோம். இருந்தபோதும் நாம் என் கடிதமெழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம் என்பதைப் பற்றி கூற ஆரம்பித்தோம். இதில் நாம் சந்ததியாரை சம்பந்தப்படுத்தவில்லை. வாக்குமூலமெழுதும் தோழர் எம் நிலையையும், எமது போராட்டத்தின் உண்மையையும் புரிந்து கொள்ளத் தொடங்கினார். அவர் எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் தவறானதும் சோடிக்கப்பட்டதும் என்று அறிந்து, கண்கலங்கி கண்ணீரும் விட்டார். அத் தோழர் கூறினார், நாங்கள் நினைத்தோம் நீங்கள் எல்லாரும் துரோகிகள் என்று தமது முன்னைய நிலைப்பாட்டை தெரிவித்தார். எமது வாக்குமூலம் சசியிடம் கொடுக்கப்பட்டது. அதை வாசித்த சசியோ, எம்மிடம் வந்து அடிவாங்கியும் திருந்தமாட்டிங்களாடா என கூறிவிட்டுச் சென்றார். பிற்பகல் மாணிக்கம்தாசனும் செந்திலும் வந்திருந்தார்கள். அவர்கள் எமது வாக்குமூலத்தை வாசித்து விட்டு, எம்முன்னே அதை கிழித்து எறிந்தனர். காரணம் நாம் சந்ததியார் தான் இதற்கு காரணம் என்று கூறவில்லை என்பதுதான். நீங்கள் நான் சொல்லுறமாதிரி எழுத வேண்டும் எனக் கூற, அதை மறுத்தவராக செந்தில் தேவையில்லை என்றான். அதை எல்லாம் தங்கராஜா கூறிவிட்டார் தானே எனக் கூறி, அவ்விடத்தை விட்டு அகன்றனர். அப்போது தான் எமக்குத் தெரிய வந்தது, ஏன் தங்கராஜாவை எம்மிடம் இருந்து பிரித்தார்கள் என்பதை. தங்கராஜாவை கொண்டு தாம் என்ன நினைக்கின்றார்களோ, அதை செய்து முடிக்கலாம் என எண்ணியிருக்க வேண்டும்.
அன்றிரவு மறுபடியும் அடி விழுந்தது. மறுநாள் காலை எமது இடம் மாற்றப்படுவதாக கூறினர். சசி எம்மை முகாமின் மறுபக்கத்தில் உள்ள ஒரு மூலையில், அதுவும் களஞ்சிய அறைக்கு சற்றுத் தூரத்தில் கொண்டு சென்றனர். இது மட்டக்களப்பில் புயல் வீசிய போது, வீடு இழந்தவர்களுக்கு என வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகை (ரென்ற்;) ஒன்றில் எம்மை தங்கவைத்தனர். அதைச் சுற்றி எட்டுப்பேரைக் காவலிற்கு நிற்பாட்டினர். அப்போது எம்மில் ஒருவர் வெளியே போக வேண்டிய நிலை ஏற்பட்டால், உடனே முகாமில் இருந்து இருவரை காவலுக்கு அழைப்பார்கள்.
சந்ததியார் கைது செய்யப்பட்டது எமக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அதைப்பற்றிச் சிந்திக்க எம்மால் முடியவில்லை. காரணம் உடம்பின் வலி. இதன் பின் சந்ததியாருக்கு என்ன நடந்தது என்று நாம் அறிய முடியாத நிலையில் இருந்தோம்.
சந்ததியாரின் கைது என்பது, முகாம்களில் கசிய ஆரம்பித்தது. இருந்தபோதும் அவரைப் பற்றி பலவிதமாக பொய்ப்;பிரச்சாரங்கள், திட்டமிடப்பட்டு முகாம்களிற்குள் பரப்பப்பட்டன. அதில் ஒன்று தான் எம்மையும் அவரையும் இணைத்து, நாம் கழகத்தை அழிக்க புறப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது. சந்ததியாரை ஏன் கழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என இவர்கள் முடிவெடுத்தார்கள் என்பதை ஆதாரப்படுத்தும் வகையில், டேவிட் ஐயாவால் எழுதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஈழத்தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலதிபர் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்க.   உண்மையான தகவல்கள் கிடைப்பது என்பது, முகாம்களில் மட்டுப்படுத்தப்பட்ட விடையமாக இருந்ததால், இத்தப் பச்சோந்திகளால் சொல்லப்பட்ட தகவல்களை பலர் நம்பினர். ஒரு சிலருக்கு தகவல்கள் ஆங்காங்கே தெரியவந்த போதும், அதை மற்றவர்களிடம் கதைப்பதனை தவிர்த்தார்கள. காரணம் யார் உளவாளிகள் என்று தெரியாத பயத்தால்.

அன்று இரவும் எமக்கு மீண்டும் அடி விழுந்தது. இதனால் எமது உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. நான் நடக்க முடியாதிருந்தேன். நான் எங்கு செல்வது என்றாலும், இருவர் என்னை தூக்கிக் கொண்டுதான் செல்வார்கள். விஜிக்கோ கழுத்தில் ஏற்பட்ட நோவால் இரவில் படுக்கமுடியாது மிகவும் கஸ்டப்பட்டார். அன்ரனியின் உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனந்தன் மலம் கழிக்கச் சென்றால், இரத்தமாகத்தான் செல்வதுடன் அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டது. இவ்வாறு எம்முடன் இருந்த அனைவரின் உடல் நிலையும் பாதிப்பிற்குட்பட்டிருந்தது. இக்காலத்தில் எம்மீதான அனுதாபம் முகாமில் அதிகரிக்கத் தொடங்கியது. எமது போராட்டத்தின் உண்மைத்தன்மையைப்,  புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். இதற்குக் காரணம் எமது வாக்குமூலத்தைப் பெற்ற அந்தத் தோழர் தான். நாம் வெளியில் (மலம் கழிக்க) செல்வது என்றால், எம்முடன் கதைக்க வேண்டாம் எனவும் எமக்கு அருகாமையில் நின்று கடமைபுரிய வேண்டும் எனவும் முகாம் தோழர்களுக்கு விதிக்கப்பட்ட அந்தக் கட்டளையை பலர் மீற ஆரம்பித்தனர். எம்முடன் உரையாடுவதுடன், எம்மை மலம் கழிக்க விட்டு விட்டு தூரத்தில் நிற்பார்கள். அத்துடன் எம்மிடம் இருந்து என்ன நடந்தது என்பது பற்றி அறியவும் முற்பட்டார்கள்.

ஆரம்பகாலங்களில் எமக்கு உணவு தருவதென்றால் வேண்டாவெறுப்பாக தந்தவர்கள். தற்போது தோழமை உணர்வுடன் தரத் தொடங்கினர். இறைச்சி சமைக்கும் நாட்களில், இறைச்சிக்கறியை சாப்பாட்டுத் தட்டின் கீழே போட்டு விட்டு அதன் மேல் சோறு போட்டு, மீண்டும் இறைச்சிக் கறியைப் போட்டு எமது உடம்பை தேற்றுவதற்கு தம்மால் இயன்ற வகையில் பாடுபட்டார்கள். ஆனாலும் இரவில் திடீர் திடீர் என வரும் மேல் மட்டத்தினர், தமது உடற்பயிற்சிக்காக எம்மைப் பதம் பார்த்துச் செல்வார்கள். எமது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆனந்தன், விஜி, அன்ரனி, என் போன்றோரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து சென்றதை அவதானித்த முகாம் தோழர்கள், எம்மைப் பார்வையிட வந்திருந்த இராணுவப் பொறுப்பாளர் கண்ணனிடம் கூறினர். எமக்காக ஓரளவுக்கு கதைத்திருக்கின்றார்கள். கண்ணன் எம்மைச் சந்தித்த போது, நாம் அவருடன் கதைக்க முடியாத நிலையில் இருந்தோம். இதை அவதானித்த கண்ணன் திடீர் என வாமதேவனை அழைத்து, எமக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கும்படி கூறினார். இதனாலோ என்னவோ, இரு நாட்கள் கழித்து அனைத்து முகாங்களின் மருத்துவப் பொறுப்பாளர் எமக்கு வைத்தியம் செய்வதற்காக வாமதேவனால் அழைத்து வரப்பட்டார். இவர்களுடன் மாணிக்கம்தாசனும், கனடா என்ற தோழரும் வந்தனர் இதில் கனடாவை எமது பாதுகாவலுக்கு பொறுப்பாகவும் தங்கராஜாவின் பாதுகாப்பிற்கு சசியை பொறுப்பாக இருப்பதாக அறிவித்ததுடன், சசி எம்மையும் மேற்பார்வை செய்வார் எனத் தெரியப்படுத்தினார்கள்.

வந்திருந்த வைத்தியர் ஒவ்வொருவராக களஞ்சிய அறைக்குள் அழைத்து சோதனையிட்டார். அப்போது ஒவ்வொருவரும் தமக்கான வருத்தத்தை சொல்ல, அதற்கான மருத்துவத்தைச் செய்தார். இவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்திருந்ததால், எனது வருத்தத்தின் நிமித்தம் நான் மலம் கழிக்கச் சென்று விட்டேன். இறுதியாளாக என்னை அழைத்தனர். அங்கு சென்றதும் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அனைத்து முகாம் மருத்துவப் பொறுப்பாளராக வந்திருந்தவர், எனது உறவினரும் ஒன்றாக பயிற்சிக்கு வந்தவருமான அழகன். அவர் என்னைக் கண்டதும், அதிர்ச்சியில் கண் கலங்கினார். என்னை அவர் பார்க்கவில்லை. காரணம் அவரால் எனது நிலைமையை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. ஒன்றும் கதைக்க முடியாத சூழ்நிலை. அவர் அருகே வாமதேவனும் நின்றிருந்தான்.
என்னை தனது அருகே அழைத்து, எனது காயங்களையும் எனது கால் முதுகின் நிலமையையும் மேலோட்டமாக பார்த்து விட்டு, எம்மை வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறினார். வாமதேவனோ இவங்கள் அத்தனை பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடியாதென, அவருடன் ஏறிப் பாய்ந்தான். என்னை தூக்கி வந்த தோழர்கள், மீண்டும் தூக்கிச் சென்று எமது கூடாரத்துக்குள் விட்டனர் அப்போது தான் எனக்குத் தெரிந்தது, ஏன் வாமதேவன் கத்தினான் என்று. அதாவது எம் நால்வரையும் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பதுடன் சலா, சண் என்பவர்களையும் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இவரின் பரிந்துரையின் பெயரில் முதலில் ஆனந்தனும் விஜியும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை ஒருவருடரும் கதைக்க வேண்டாம் என்றும், தனிமைப்படுத்தியே வைத்திருந்ததாக கூறினார்கள். ஆனந்தன் ஒரு சில நாட்களில் திரும்பினார். விஜியோ நீண்ட நாட்களாக திரும்பி வரவில்லை. எமக்கோ பயமும் சந்தேகமும் தோன்றியது. விஜியை புதைத்து விட்டார்களோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் இருகிழமைக்கு பின்னர் அவர் திரும்பினார். அவரின் கழுத்தைச் சுற்றி பிளாஸ்டர் பரீஸ் போடப்பட்டிருந்தது. இவரால் எழும்புவதில் இருந்து உணவு உட்கொள்வது வரைக்கும் இன்னொருவர் உதவி தேவைப்பட்டது. இவர்கள் இருவரும் வந்த பின்னர், அவ்வேளையில் அதிக சுகயீனத்தால் சலாவும் விஜயனும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். எனக்கும் அன்ரனிக்கும் முகாமிலேயே மருத்துவம் வழங்கப்பட்து. எனது மனநோய் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மேலும் கால் நடக்க முடியாதிருந்தது. அதை முகாமில் இருந்த ஒரு தோழர், எண்ணெய் போட்டு வைத்தியம் செய்தார். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்தான் பயிற்சியின் போது உடம்பில் காயப்பட்டவர்களுக்கு எண்ணெய் போட்டு வைத்தியம் செய்பவர். ஏன் இன்று நான் நின்றபடியோ அல்லது ஓடி ஆடி வேலை செய்வதோ, அந்தத் தோழரின் நோ எண்ணெய் தான். அவர் எனக்காக பல இலைகளை வெட்டி நோ எண்ணெய் காய்ச்சி காலையிலும் மாலையிலும் தவறாது தடவி விடுவார்.
இவர் எம்மைக் குணமாக்க தன்னை அர்ப்பணித்தவர் என்றே கூறலாம். காலையில் பயிற்சி முடிந்து, காலை உணவு அருந்தியதும் பலர் ஓய்வெடுப்பார்கள். ஆனால் இவரோ எம்மிடம் வந்து எண்ணெய் தடவி தனது ஓய்வுநேரத்தை எமக்காக செலவிட்டார். இவரை விட பல தோழர்களும் எமக்கான உதவிகளையும் தம்மால் முடிந்தவற்றையும் செய்ய ஆரம்பித்தனர்.
ஆம் தோழர்கள் என்ற பந்தத்திற்கு உரியவர்கள் இவர்கள் தான். தோழமையற்ற மனிதநேயமற்ற நேர்மையற்ற அரசியலைக் கொண்ட இந்தத் தலைவர்களை நம்பி எத்தனை ஆயிரம் தோழர்கள். அவர்கள் தமது உற்றார் உறவினர், சொந்தபந்தம், கல்வி, கடமை போன்ற பலவற்றைத் துறந்து, தாய்மண்ணின் விடிவிற்காக போராடப் புறப்பட்டவர்கள். இவர்களுக்கு இந்தத் தலைமை செய்தது என்னவெனின், தமது சுகபோக வாழ்க்கைக்காகவும், தமது மக்கள் விரோதக் கொள்கைக்காகவும், அவர்களைப் புதைத்தும், மனோநிலை பாதிப்படையச் செய்ததும் தான். ஏன் எதற்காக வந்தார்களோ, அதை மறுத்து தமது சொந்த மக்களுக்கு எதிராக போராடவும் தூண்டினர். இப்படிப்பட்ட தலைமை இந்தத் தோழர்களுக்கும், மக்களுக்கும் கொடுத்தது ஏமாற்றங்கள் தான்.
    

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும்!!-புளாட்டில் நான் பகுதி - 12

அடியில் மயங்கினேன், சிறுநீரோ இரத்தமாகவே சென்றது - புளாட்டில் நான் பகுதி - 11

எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும்… புளாட்டில் நான் பகுதி - 10)

புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் – புளாட்டில் நான் – 09

மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்-புளாட்டில் நான் பகுதி -08

சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை-புளாட்டில் நான் பகுதி – 07

நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன்-புளாட்டில் நான் பகுதி – 06

தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

தண்டனை முகாமை எல்லோரும் “நாலாம் மாடி” என்பார்கள்-புளாட்டில் நான் பகுதி – 04

மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்…புளாட்டில் நான் பகுதி – 03

1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும்-புளாட்டில் நான் பகுதி 2

தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர்-புளாட்டில் நான் பகுதி – 01-சீலன்