மக்களின் விடுதலை, புரட்சி, மார்க்சியம்.. என்று கூறிக்கொண்டு உருவான முரண்பாடுகளும், அமைப்பு உடைவுகளும் மீண்டும் ஒருமுறை எம்மை ஏமாற்றியே வந்துள்ளது. கடந்த 23 வருடத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சார்ந்த ஒரு உண்மை, அண்மையில் தான் அம்பலமாகியது. ஆம், அன்று கிட்டுவுக்கு குண்டெறிந்தது யார் என்ற உண்மையினூடு தான். மார்க்சியம் பேசியபடி, தனிநபர் பயங்கரவாதத்தில் தீப்பொறி முடங்கிக் கிடந்த உண்மை இன்று அம்பலமாகியுள்ளது.
இதை இவர்கள் வெளிப்படுத்தினார்கள் என்று கூறி, இன்று வகைதொகையற்ற தாக்குதலை தீப்பொறியின் வாரிசுகள் என்று இன்று கூறுகின்றவர்கள் தொடங்கியுள்ளார்கள். தீப்பொறியின் மற்றைய முக்கிய உறுப்பினர்களை வெளியேற்றிய போது, முன்வைத்த விமர்சன ஆவணங்களைக் கூட, வரலாற்றின் முன் திட்டமிட்டு புதைத்து வைத்துள்ளனர். விமர்சனம், சுயவிமர்சனமற்ற வகையில் தங்கள் கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி தான், புதிய அரசியல் மோசடிகளில் மறுபடியும் ஈடுபடுகின்றது. அது தன்னை மறுபடியும் மே 18 நீட்சியாக கூறிக்கொண்டு, திடீரென அரசியலில் ஈடுபடுகின்றது. கேசவன் உட்பட சிலர் புலியால் கொல்லப்பட, முன்னணி தீப்பொறி உறுப்பினர்கள் தீப்பொறியின் தவறான அரசியலை விமர்சித்து விலகிய நிலையில், மார்க்சியத்தின் பெயரில் புலிக்கு சிவப்பு கம்பளம் விரித்தது எஞ்சிய தீப்பொறி. இறுதியில் புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக செயல்பட்டு, புலியுடன் சங்கமமாகிய வரலாற்றில் காணாமல் போனது. இன்றும் தாம் தான் தொடர்ந்து தீப்பொறியின் இன்றைய வாரிசுகள் என்று கூறிக்கொண்டு, மே18 நீட்சியாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த தீப்பொறி வாரிசுகள் என்று மார்புதட்டும் இந்தக் கூட்டம், அன்று கிட்டுவுக்கு குண்டு எறிந்த அரசியல் எந்த வகைப்பட்டது என்பதே, இங்கு இதில் குறிப்பாக பேசும் பொருளாகின்றது. மறுபடியும் இந்தக் கூட்டம் தனிநபர் பயங்கரவாத அரசியலைக் கொண்டு தான், மே 18யின் அரசியல் நீட்சியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ஒரு சதிக் குழுவாக தன்னை முன்னிறுத்தி வருகின்றது.
வரலாற்றில் கிட்டுவுக்கு குண்டு வீசிய சம்பவத்தை, புலியின் உள்ளான வழமையான சம்பவங்களில் ஒன்றாகவே நாமும் கூட கருதி வந்தோம். மிக அண்மையில் தான், இது தீப்பொறி நடத்திய தனிநபர் பயங்கரவாதம், என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை இன்று அரசியல்ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. மீண்டும் குண்டுகளை இலங்கையில் வெடிக்க வைக்கும், இரகசிய சதி அரசியல் தான் பல தரப்பின் அரசியல் தெரிவாக இன்றும் உள்ளது. இடதுசாரியம், மார்க்சியத்தின் பெயரிலும் கூட இதுதான் இன்று தெரிவாகின்றது.
அன்று புளட்டுக்கு எதிரான மக்கள் அரசியலுடனும், மக்களுக்கு எதிரான இயக்க அரசியலையும் எதிர்த்துதான், புளட்டில் இருந்து உருவானது இந்தத் தீப்பொறி. இந்த தீப்பொறி தன்னை ஒரு அமைப்பாக தக்கவைக்க, என்.எல்.எவ்.ரியின் நிதி மற்றும் உதவிகள் முக்கியமான பங்காற்றியது. இப்படி உருவான அமைப்பு, கிட்டுக்கு குண்டெறிந்த நிகழ்வு அதன் அரசியல் வங்குரோத்தைக் எடுத்துக் காட்டுகின்றது.
நாம் இதுவரை காலமும், கிட்டுக்கு குண்டு எறிந்ததை புலிகளின் உள் விளையாட்டாக கருதி கருத்து உரைத்து வந்திருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல, புலிகள் கூட அப்படித்தான் கருதி வந்தனர். புலியின் முரண்பட்ட குழுவில் ஒன்று இதை செய்ததாகவே, அவர்களுக்குள்ளும் கூட கருதினர். அதிகார மோதல்களும், சதிகளும் புலியின் உள்ளார்ந்த விதியாக இருந்தது. புலிகள் இயக்கத்தில் இதுபோன்ற முறைகள் மூலம் தான், முரண்பாட்டை களைவதும், தலைமையை தக்கவைப்பதும் ஒரு இயக்க நடைமுறையாகவும் இருந்தது.
புலிகளின் உள்ளான நிகழ்வுகள் இப்படி அணுகப்பட்ட நிலையில், வெளியில் உள்ளவர்கள் இப்படித்தான் இந்நிகழ்வையும் பார்த்தனர். கிட்டுவுக்கு குண்டு வீசிய பிற்பாடு, ஒரு மாதம் கழிந்த நிலையில் புலிகள் என்னைக் கடத்திச் சென்றனர். சித்திரவதைகளின் இடையில் என்னை மிரட்டி அடிபணிய வைக்க "கிட்டுக்கு குண்டு எறிய ஏலுமாடா" என்று கேட்டும் மாத்தையா என்னைத் தாக்கினான். இது நடந்து சிறிதுகாலத்தின் பின், கிட்டுவுக்கு கீழ் இருந்த ஐவர் குழுவை தங்கள் பொறுப்பை விட்டு விலகுமாறு பிரபா-மாத்தையா குழு நிர்ப்பந்தித்தது. அவர்கள் ராஐpனாமா செய்த அன்று, எனது வதைமுகாமில் அது கொண்டாடப்பட்டு, விசேட விருந்தும் வைக்கப்பட்டது.
அன்று கிட்டுவிற்கு எதிராக, பிரபா-மாத்தையாவும் தங்கள் தலைமையை தக்கவைக்கும் போராட்டத்தை புலிக்குள் நடத்தினர். இந்த நிலையில் தீப்பொறிதான் இதை செய்தது என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
இதை தீப்பொறி அமைப்புத்தான் செய்தது. அதன் மத்தியகுழுவில் யார் இதை முன்வைத்தது, யார் இதை எதிர்த்தனர் என்ற விபரங்களும், என்ன நடந்தது என்ற விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. இது இந்தக் கட்டுரையில் முக்கியமானதல்ல. தீப்பொறியின் மத்தியகுழு முழுக்க எந்த முரண்பாடும் இன்றி, எந்த எதிர்ப்பும் முரண்பாடுகளுமின்றி இது நடக்கவில்லை. இந்த முரண்பாடுகள் தான், தொடர்ந்து உமாமகேஸ்வரனை கொல்லும் முடிவையும் தடுத்தது. இது போன்ற அரசியல் மற்றும் நடவடிக்கைதான், தீப்பொறியின் மத்தியகுழுவைச் சேர்ந்த பலர் விலகக் காரணமாகும். இதைச் செய்த தீப்பொறியின் மத்தியகுழு உறுப்பினர்கள், எந்த சுயவிமர்சனமுமின்றி தொடரும் அரசியல் தொடர்ந்தும் தனிநபர் பயங்கரவாதத்தின் அரசியல் ஊற்றாக உள்ளது. இந்த வகையில் இந்த முடிவை முன்னின்று எடுத்தவர்கள் யார் என்பது தெரிந்து கொள்ளவேண்டிய தேவையும் இன்று எம்முன்னுள்ளது.
நாம் இங்கு விவாதிப்பது கிட்டுக்கு குண்டெறிந்த அரசியல் எது என்பதுதான்? கிட்டுக்கு குண்டெறிய முடியாதா எனின் முடியும், ஆனால் அதை தீப்பொறி செய்யமுடியாது. தீப்பொறி செய்தால் அது தனிநபர் பயங்கரவாதமாகும். ஏன்?
புலியில் இருந்து புளட் உருவான போது, புலியின் எந்த அரசியலை எந்த நடவடிக்கையை தவறு என்று சொல்லி வெளிவந்தனரோ, அதையே மறுபடியும் புளட் செய்யத் தொடங்கியது. இதனால் புலியில் இருந்து விலகிய பெரும்பான்மை உறுப்பினர், புளட்டில் இருந்து விலகினர். இதை முன்கூட்டியே உணர்ந்த சிலர், புளட்டுடன் சேரவில்லை. அதே பழைய புலி அரசியல் தான், மறுபடியும் புளட் அரசியலாகியது.
இதே போல் புளட்டில் இருந்து விலகிய தீப்பொறியும், புளட்டின், புலியின் அதே தனிநபர் பயங்கரவாத அரசியலை முன்னெடுத்தது, கிட்டுவின் மேலான கொலை முயற்சி எடுத்துக் காட்டுகின்றது. இந்த அடிப்படையில் தான், தன்னை ஒரு இரகசிய அமைப்பாக மாற்றியிருந்தது என்பது தெளிவாகின்றது. இக்காலத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் முதல் பல வெகுஜனப் போராட்டங்களுடன் தன்னை இணைக்க முன்வராத தன்மை, அதன் தனிநபர் பயங்கரவாதம் மூலம் வெளிப்படுகின்றது. என்.எல்.எவ்.ரி போன்ற அமைப்புக்களுடன் கூட உறவை துண்டித்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது, ஏன் என்பது இன்று புலனாகின்றது. தனிநபர் பயங்கரவாத செயலை செய்த, ஒரு இரகசிய சதிக் குழுவாக அது இருந்தது இன்று புலனாகின்றது.
இதன் அரசியல்ரீதியான வரலாற்று வேர் எங்கிருந்து உருவாகின்றது என்று பார்ப்போம்? தீப்பொறி வெளியேற்றம் எப்படி நடந்தது என்ற அடிப்படை, இதற்கு பதில் சொல்லுகின்றது. புளட் அமைப்பில் பகிரங்கமான ஒரு போராட்டத்தின் ஊடாக தீப்பொறி வெளியேற்றம் நடக்கவில்லை. அமைப்பின் நிர்வாகங்களில் தலைமைகளில் இருந்;தவர்கள், தங்கள் சரியான கருத்துகளுடன் தம்மை சுற்றிய இரகசிய சதிக்குழுவாக இயங்கினர். இப்படியே தப்பியோடியவர்கள், தங்கள் கடந்தகால நடைமுறையை விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. அதேபாணியில் மீண்டும் தம்மை தனிமைப்படுத்தியபடி, இயங்கத் தொடங்கினர். தனிநபர்களை அழிப்பதன் மூலம் சூழலை மாற்றமுடியும் என்று கருதியே, கிட்டுவுக்கு குண்டு எறிந்தது. உமாமகேஸ்வரனை கொல்லத் திட்டம் தீட்டியது என்பன. வேறு யார் யாரென, யாம் அறியோம்! இங்கு கிட்டுவுக்கு குண்டெறிந்ததன் மூலம், பிரபா-மாத்தையாவின் தேவை பூர்த்தியாகியது. இது என்ன அரசியல் ரீதியான தனிநபர் பயங்கரவாதம் சார்ந்த யுத்த தந்திரம்!
தீப்பொறி வெளியேற முன் அவர்கள் இருந்த புளட் எப்படிப்பட்டதாக இருந்தது? புளட் தன் மக்கள் விரோத செயல்கள் மூலம், சுரண்டும் வர்க்கத்தினதும் சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் ஒரு அமைப்பாக தனது நடைமுறையில் வெளிப்படுத்தியது. இதை மூடிமறைக்க மார்க்சியம் உதவியது. இதுதான் பொதுவான அரசியல் வெளிப்படையாக இருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிரான போக்குகள், அமைப்பின் உள் காணப்பட்டது. அதிருப்திகள் பல வடிவில் வெளிப்பட்டது. இதை ஒரு வெளிப்படையான போராட்டமாக அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. எதிர்மறையில் இது ஒரு சதிக் குழுவாக, இரகசியமான குழு நடவடிக்கையாக அது மாறியது. பரந்த தளத்தில் காணப்பட்ட எதிர்ப்பு, ஒருங்கிணைந்த ஒரு போராட்டமாக மாறவில்லை. அதை தடுத்த நிறுத்தும் போக்கு, தீப்பொறியில் இருந்து வெளியேறியவர்களிள் அரசியல் வழிமுறையாகவும் கூட இருந்தது. இதனால் பலர் உதிரியாக வெளியேறி வந்தனர். இப்படி வெளியேறியவர்கள், சுயாதீனமாகவே மக்களின் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர்.
உண்மையில் தளத்தில் இருந்து இந்தியப் பயற்சி முகாம் வரை காணப்பட்ட பொதுவான அதிருப்தியும், மக்கள் அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தை ஒருங்கிணைக்காமல் உதிரியான செயலாக, இரகசிய சதி குழு நடவடிக்கையாக மாறியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பொதுவான அரசியல் குமுறலை வெளிப்படாதவாறு தடுத்தவர்கள், தீப்பொறியாக பின்னால் (பார்க்க- புதியதோர் உலகம் என்ற நாவலை) வெளியேறியவர்கள்தான். இதனால் தான் பலர் உதிரியாக வெளியேறினர். தீப்பொறியைச் சோந்தவர்கள் அமைப்புகளின் பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருந்த காலத்தில், மக்கள் விடுதலைக்கு எதிராகச் செல்வதாக கூறி போராடிய பலர், புளட்டின் சிறைகளிலும் சித்திரவதைகளிலும் சிக்கி கொல்லப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
இப்படி பொறுப்புகளில் பதவிகளில் இருந்தவர்கள் தம்மை நோக்கி இது வருவதைக் கண்டவுடன், முற்றாக தம்மை இரகசிய குழுவாக்கிகொண்டு திடீரென்று தப்பி ஓடினர். ஆம் அப்போது என்.எல்.எவ்.ரி. பல வழியில் தப்பியவர்களுக்கு உதவியது. உதிரியாக சிதறாது, முரண்பாடுகளில் நொருங்காது ஒரு அமைப்பாக மாற என்.எல்.எவ்.ரி. தான் பலவிதத்தில் உதவியது.
அன்றைய சூழல் சார்ந்து தலைமறைவுக் குழுவாக தீப்பொறி மாறிய போது, இவர்களுக்கு முன்னும் பின்னும் வெளியேறிய பல குழுக்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் இயங்கத் தொடங்கியது. அவை தீப்பொறியுடன் தம்மை அடையாளப்படுத்தவில்லை. அதற்கான எந்த அரசியல் அடிப்படையையும், அவர்கள் விட்டுச்செல்லவில்லை. தீப்பொறியில் இருந்தவர்களின் கடந்தகால செயல்பாடு, இவர்களுக்கு முன் அனுபவமாக இருந்தது. மறுபக்;கத்தில் தீப்பொறி புளட்டுக்கு தலைமறைவாக இருக்கவேண்டிய சூழல், அவர்களின் தனிநபர் பயங்கரவாத அரசியலை மூடிமறைத்தது.
புளட்டை புலி அழிக்கத் தொடங்கிய காலத்தில், தீப்பொறி புளட்டுக்கு அஞ்சி தலைமறைவு முடிவுக்கு வந்தது. ஆனால் தீப்பொறி மக்கள் முன் இயங்க முன்வரவில்லை. குறிப்பாக இயக்கங்களுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த காலம் அது. இதன்போது கூட தீப்பொறி தன்னை வெளிப்படுத்தவில்லை. மக்கள் திரள் அமைப்பு வேலையில் தன்னை ஈடுபடுத்த முன்வரவில்லை. இதற்கு தலைமை தாங்கிய பல்வேறு சக்திகளுடன் இணைந்து போராடி, நடைமுறையூடாக ஐக்கியத்தைக் கட்டவில்லை.
உண்மையில் புளட்டில் இருந்து விலகிய குழுக்கள், உதிரிகள் போராட்டத்தில் முன்னின்ற போது, தீப்பொறி தன்னை மக்கள் முன் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இப்படி எந்த வகையிலும் புளட்டில் இருந்து விலகி மக்களுடன் சேர்ந்து பகிரங்கமாக போராடியவர்களுடன் கூட இணைவதற்கான, மக்கள் திரள் அரசியல் மூலம் தீப்பொறி தன்னை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது புளட்டின் உள் முரண்பாட்டின் போது எப்படி தீப்பொறி நடந்ததோ, அதேபோல் இரகசிய குழுவாக தன்னை ஒழுங்கமைத்து தலைமறைவானது. வெகுஜனங்களை அணிதிரட்டும் அரசியல் வேலையை அது செய்யவில்லை. இந்தக் குழுதான் கிட்டுவுக்கு குண்டு எறிந்திருக்கின்றது.
மறுபக்கத்தில் இந்தத் தீப்பொறி, மக்கள் மத்தியில் வேலை செய்த என்.எல்.எவ்.ரி.யுடன் இணைவுக்கு பதில் விலகிச்சென்றது. நெருக்கடி தணிந்த காலத்தில், அது முற்றாகவே தலைமறைவுக் குழுவானது. என்.எல்.எவ்.ரி. யின் தொடர்பைக் கூட அது கொண்டு இருக்;கவில்லை. பொதுவாக என்.எல்.எவ்.ரி. போன்ற எந்தக் குழுவுடனும் கூட, தன்னை இணைத்து வெளிப்படுத்தவில்லை. இந்தக் குழுதான் குண்டு எறிந்திருக்கின்றது என்ற செய்தி, அதன் அன்றைய அரசியலை இன்று மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
கிட்டுவுக்கு குண்டெறிய முடியும், ஆனால் யாரால்? மக்கள் மத்தியில் அரசியலை முன்வைத்து வேலை செய்பவர்கள் மட்டும்தான் அதை செய்ய முடியும். அன்று எதிர்ப்புரட்சி அரசியல் படுகொலையாக மாறிய நிலையில், தற்காப்பு முதல் எதிர்த்தாக்குதல் வரை செய்வது அவசியமாக இருந்தது. அதை தனிநபர் பயங்கரவாதத்தில் இருந்து, வேறுபடுத்துவது மக்கள் திரளைக் கட்டும் அதன் நடைமுறைதானே ஒழிய மார்க்சியம் பேசும் தகுதியல்ல. நடைமுறை ரீதியாக
1. மக்கள் திரள் அமைப்பைக் கட்டும் அரசியல் வேலையை செய்த வண்ணம் இருக்கவேண்டும்.
2. அப்படிச் செய்பவர்களுடன் ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலம், இதை முன்னெடுக்கவேண்டும்.
3. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஆதரித்தும், அதற்கு தலைமை தாங்குபவர்களுடன் இணைந்தும், தலைமையை தாங்கள் கொடுத்தும் பயணிக்கவேண்டும்.
இப்படி இல்லாத வரை, மார்க்சியம் பேசினாலும் அது தனிநபர் பயங்கரவாதம் தான்;. ஆம் பழைய இயக்க அரசியலின் தொடர்ச்சிதான். தனிநபர்களை அழிப்பதன் மூலம், பயங்கரவாத செயல்கள் மூலம், மக்கள் புரட்சி வரும் என்று கூறுகின்ற பித்தலாட்டம்;. மார்க்;சியத்தை பேசுவதன் மூலம், தனிநபர் பயங்கரவாதத்தை மக்கள் புரட்சியாக காட்டி அதை மக்களுக்கு அணிவித்து விடமுடியாது.
பி.இரயாகரன்
01.03.2011
No comments:
Post a Comment