Wednesday, March 30, 2011

புளட் சதிகாரக் கும்பல் மட்டுமல்ல, திட்டமிட்ட கொலைகாரர்களும் கூட – பகுதி 1

புலியைப் போல் தான் புளட்டும். புளட் உள்ளியக்கப் படுகொலையில் புகழ்பெற்றது. அதை அன்று முன்னின்று செய்த கூட்டம், இன்றும் அதை நியாயப்படுத்த களமிறங்குகின்றனர். 25 வருடங்களுக்கு முன் இதை எதிர்த்துப் போராடி வெளியேறியவர்களை மீண்டும் குற்றவாளியாக்கியபடி, 25 வருடங்களின் பின் அதே வக்கிரத்துடன் தம்மை மூடிமறைத்தும் நியாயப்படுத்தியும் வக்கிரமாகவே வாந்தியெடுக்கின்றனர்.
அன்றைய சதிகாரர்கள், கொலைகாரர்கள் பிரதிநிதியான ஜென்னி தேசம்நெற்றில், தாளம் போடுகின்றார். அன்றைய தங்கள் சதிகள் தான் உண்மையானவை நியாயமானவை என்று, மீளவும் கூறுகின்ற வரலாற்றுப் புரட்டை மூடிமறைத்தபடி முன்வைக்கின்றனர்.
தனிநபர்கள் தங்களை நியாயப்படுத்தியும், சிலரைப் பாதுகாத்தும் சொல்லுகின்ற கதைகளுக்கு அப்பால், புளட் என்னவாக இருந்தது? இது ஒரு மக்கள் இயக்கமா? இடதுசாரிய இயக்கமா? இல்லை. வலதுசாரிய பாசிச இயக்கம்;. புலிக்கு நிகரானது.  இதைத்தான் தனிநபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இங்குதான் எதிரும் புதிருமான போராட்டங்கள் நடந்தன. இது தான் வரலாறு.
புளட் ஒன்றும் மக்கள் சார்பான விடுதலையியக்கமல்ல. புலியைப்போல் தான் அதுவும் ஒரு மக்கள் விரோத இயக்கமாகும்;. வலதுசாரிய பாசிச இயக்கமாகும். அதனிடம் ஜனநாயகத்தின் கூறுகள் எதுவும் இருக்கவில்லை. மக்களை ஏய்க்க புலியைப் போல் மார்க்சியம் இடதுசாரியத்தை அதுவும் பேசியது. புலியில் இருந்து பிரிந்ததால் மார்க்சியம் இடதுசாரியம் அமைப்பின் உள், ஒரு அரசியல் சக்தியாக நீடித்தது. கூட்டணியில் இருந்து வந்த வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கொண்ட கலவையாக உருவான அமைப்பு, இனவிடுதலை ஊடாக வளர்ந்த வலதுசாரியத்தின் ஆதிக்கம் அதற்குள் கோலோச்சியது.
மக்களுக்கு எதிரான வலதுசாரியப் போக்கு அதன் பொது நடைமுறையாக, உள் இயக்க முரண்பாடுகள் கூர்மையாகின. அமைப்பில் ஜனநாயகம் இன்மையால் முரண்பாடுகளுக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்பட்டது. தனது உறுப்பினர்களை சித்திரவதை செய்தும், படுகொலைகளை செய்தும் தான், அது ஒரு அமைப்பாக நீடித்தது. அப்படிப்பட்ட அமைப்பில் இதை நியாயப்படுத்தியும், இதை முன்னின்றும் செய்த தனிநபர்களின் பாத்திரம் சார்ந்த நடத்தைகளை மூடிமறைத்து நியாயப்படுத்துகின்ற கூத்துத்தான் ஜென்னி இன்று தேசம்நெற்றில் அரங்கேற்றும் நாடகமாகும்;. அரசியலில் வலதுசாரிய எதிர்ப்புரட்சிக் கும்பல் மட்டும்தான், இதற்கு கும்மியடிக்கின்றது. 
தாங்கள் சதி செய்தும், கொலை செய்தும் நடத்திய வக்கிரங்களை நியாயப்படுத்துகின்ற, தங்களுடன் கூடிநின்ற கூட்டத்தை பாதுகாக்கின்ற அசிங்கத்தை, ஜென்னி 25 வருடம் கழித்து மறுபடியும் செய்கின்றார். கொலைவெறியுடன் அலைந்த அன்றைய புளட்டை அப்பாவிகளாகவும், தீப்பொறியை கண்டு புளட் (தாங்கள்) நடுங்கி ஒளித்து வாழ்ந்த அப்பாவி அபலைகளாகவும் கூறுகின்ற புரட்டை கூட்டுச்சதி அனுசரணையுடன் இங்கு முன்வைக்கின்றார். தாங்கள் தீப்பொறியைக் கண்டு அஞ்சி வாழ்ந்ததாக இட்டுக்கட்டி கூறுகின்ற இன்றைய போக்கிலித்தனம், அன்று எப்படிப்பட்ட சதிகார கொலைகார கும்பலாக இவர்கள் ஆட்டம் போட்டு இருப்பார்கள் என்பதை நாம் சொல்லிச் தெரியவேண்டியதில்லை. 
செல்வன் - அகிலன் கொலையைச் செய்தவர்கள் அதை இறந்தவர்கள் மேல் புரட்டி போட்டவர்கள், ரீட்டா விவகாரத்தை அன்றைய சதிப்பாணியில் மீளவும் புனைந்து அவிழ்த்துவிடுகின்றார். இங்கு உயிருடன் இல்லாத செல்வியை துணைக்கு அழைத்து வைத்துக் கொண்டு,  கொலைகாரர்களும் பாலியல் வன்முறைக் குற்றத்தை ஏவியவர்களும் மீண்டும் பவனி வருகின்றனர். இங்கு செல்வியை தங்கள் பங்காளியாக்க முனைகின்ற சதியுடன், நரித்தனத்துடன் அரங்கேற்ற முனையும் சதிக் கூத்தை நாம் இங்கு காண்கின்றோம். இவருடன் தலைமையில் இருந்த குமரன், ஜீவன், நேசன் ஜென்னியின் இந்த கொலைகாரத்தன அவதூறுகளை இன்று மறுக்க, அன்று இவருடன் மகளிர் அமைப்பில் இருந்த செல்வி, நந்தா (சாந்தி), வனிதா (தர்மா) உங்களுக்கு எதிராக, எம்முடன் நின்று போராடினர் என்ற உண்மையை நாம் மறக்கவில்லை. அக்காலத்தில் உங்கள் கொலைகாரத்தனத்துக்கு எதிராக, சதித்தனத்துக்கு எதிராக, நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்று போராடியவர்கள். நாங்கள் தான் மாணவர்களையும் மக்களையும் திரட்டி புலிக்கு எதிராகவும் போராடியவர்கள்.
உங்கள் புரட்டுக்கு எடுததுக்காட்டு  "கண்டிப்பாக எங்களுடன் தளத்தில் ஒன்றாக நின்று மிக கஸ்டப்பட்டு வேலைசெய்த நேசனைப் போன்றோர் செய்திருக்கமாட்டார்கள் என உடனேயே சிந்தித்தோம். அதே நேரம் தீப்பொறி என அரசியல் ஒன்றை செய்ய முற்பட்டவர்களும் இந்தக் கேவலமான வேலையை செய்யச் சாத்தியமில்லை என்றே எண்ணினோம். ஆனால் கண்டிப்பாக இந்த வட்டத்தினருக்குள் திரியும் சில கறுத்த ஆடுகள் செய்ய சாத்தியம் இருந்தது. அந்நேரம் தங்கள் சொந்த பலவீனங்கள், தேவைகளுக்காக கழகத்தை விட்டு ஓடிய கையோடு சிலர் தீப்பொறிக்குள் பதுங்கிக் கொண்டதும் தெரிகின்றது. சிலபேருக்கு குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே வாழ்க்கைதானே. சிலபேர் கழகத்தில் இருப்பதாக சொல்லிக்கொண்டு கழகத்திலிருந்து விலகியவர்களுக்கு செய்திகொடுத்து விடயங்களை பூதாகரமாக்கி குளிர் காய்கின்றவர்களும் இருந்தனர். இப்படி சிலபேரின் அனுசரணையுடன் இந்த கேவலமான கீழ்த்தரமான நிகழ்வு திட்டமிடப்பட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று அழுத்திச் சொல்பவர்களின் பின்னால் சில விடயங்களைத் தேடினால் சில உண்மைகளை கண்டறியலாம்" என்கின்றார் ஜென்னி.
ரீட்டாவிடம் இருந்து ஜென்னி பெற்ற இந்த தகவல் தான், இந்த விவகாரத்தின் பின்னான முழுமையான  உள்ளடக்கம். இதில் "நேசனைப் போன்றோர் செய்திருக்கமாட்டார்கள்" என்று இன்று கூறும் ஜென்னி, இதைச் செய்தது நேசனும் விபுலும் தான் என்று அன்று சொன்னது ஏன்? அன்று இதற்காக நேசன், விபுலை நீங்கள் தேடியலைந்தது எதற்காக? விபுலையும், சுரேனையும், இடியமினையும் கைது செய்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்தது ஏன்? மக்கள் உங்களுக்கு எதிராக போராடியது ஏன்?  அன்றைய ஜென்னியின் கூற்றிலும், இன்றைய கூற்றிலும் எது உண்மை என்ற தர்க்கம் கடந்து, ஜென்னியால் மூடிமறைத்த மற்றொரு உண்மை உண்டு என்பது தான் இங்கு உள்ள உண்மையாகும்.
தொடரும்
பி.இரயாகரன்
08.03.2011 

No comments:

Post a Comment