Thursday, December 6, 2012

போரின் இறுதியில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸூக்கு கிடைத்த தகவல்!!!


போரின் இறுதியில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸூக்கு கிடைத்த தகவல்!!!

By editor • December 4, 2012 


“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பெயரை, தமிழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கில் இருந்து நீக்க வேண்டும்” என செஷன்ஸ் நீதிமன்றத்தில், தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். “பிரபாகரன் 3 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டு விட்டார். அதனால், அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்” என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணி, தற்போது பலருக்கு தெரியாது இருக்கலாம். காரணம், இங்கு குறிப்பிடப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம், சென்னை பாண்டி பஜாரில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் ஒரு தலைமுறையே வந்து விட்டது. நீங்கள் 1982-ம் ஆண்டுக்குப்பின் பிறந்திருந்தால், இவர்களது துப்பாக்கிச் சண்டை நடந்த போது, நீங்கள் பிறக்கவே இல்லை…
எனவே, இந்த வழக்கின் பின்னணி பற்றியும் சில விபரங்களை தருகிறோம்..

தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘ஈழ போராளிகளின் சகோதர யுத்தம்’என்று சொல்கிறாரே, அது 1970களின் இறுதியில் போராளி இயக்க தலைவர்களிடையே தொடங்கி, 2000களில் அனைவரையும் அழித்ததுடன் முடிந்தது. (வெளிநாடுகளில் இன்னமும் முடியவில்லை)

அதன் ஒரு பகுதியாக, விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும், பிளாட் (PLOTE) இயக்க தலைவர் உமா மகேஸ்வரனும், இலங்கைக்கு வெளியே, சென்னை பாண்டி பஜாரில், பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில், தமக்கிடையே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். 1982-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி இது நடைபெற்றது.

அதற்கு முன்னரே இரு தரப்புக்கும் முறுகல் நிலை இருந்தது… இந்த விவகாரம் தமிழகத்தில் வீதிக்கு வருவதற்கு 5 மாதங்களுக்கு முன், இலங்கையின் வடபகுதி நகர் யாழ்ப்பாணத்தில், ஜனவரி 2-ம் தேதி, பிளாட் இயக்க முக்கியஸ்தர் சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சீலன் என்பவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுந்தரம், பிளாட் இயக்கத்தின் புதிய பாதை என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். உமா மகேஸ்வரனின் வலதுகரம். சுந்தரம் கொல்லப்பட்டதால் பிளாட் தலைவர் உமா மகேஸ்வரன், விடுதலைப்புலிகளின் பார்வை அடுத்து தம்மீது திரும்பும் என்பதை புரிந்து கொண்டு படகு மூலம் தமிழகம் வந்தார்.

மே மாதம் 19-ம் தேதி, சென்னை பாண்டி பஜாரில் உள்ள restaurant ஒன்றுக்கு வந்தனர் உமா மகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும். இந்த இருவரும் உணவகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தமது மோட்டார் பைக்கை நெருங்கிய போது, வெளியே பிரபாகரன் நிற்பதை கவனித்து விட்டார் உமா மகேஸ்வரன். பிரபாகரனுடன் அவரது இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்றிருந்தார். இது நடப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன், சென்னை மவுன்ட்ரேடில் (தற்போது அண்ணா சாலை) உள்ள தியேட்டர் ஒன்றுக்கு வெளியே வைத்து, பிரபாகரன், உமா மகேஸ்வரனை சுட முயற்சித்ததாகவும், உமா மகேஸ்வரன் தப்பித்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

பாண்டி பஜாரில் பிரபாகரனை கண்டவுடன், அவர் தம்மை சுடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தம்மிடமிருந்த துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன். கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன், அதே கணத்தில், தம்மிடம் இருந்த துப்பாக்கியை உருவினார், பிரபாகரன்.

என்ன இருந்தாலும், இருவரும் ஒரே இயக்கத்தில், ஒன்றாக, ஒரே வீட்டில் இருந்தவர்கள் அல்லவா? இவர் என்ன செய்வார் என அவருக்கும், அவர் என்ன செய்வார் என இவருக்கும் அத்துப்படி. இருவரும் துப்பாக்கியை உருவியதுடன் நிற்கவில்லை, சுடத் தொடங்கினார்கள். பாண்டி பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரம் அது.

பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியால் 6 தடவைகள் சுட்டார். ஆனால், உமா மகேஸ்வரன் எந்த காயமும் இன்றி தப்பித்துக் கொண்டார். ஆனால், உமா மகேஸ்வரனுடன் வந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு ரத்தம் வழிந்தது. பிரபாகரனின் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்துவிட்ட நிலையில் அதற்குமேல் சுட முடியவில்லை. உமாமகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டதில் இருந்தும் பிரபாகரன் தப்பித்துக் கொண்டார்.

சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்களின் கவனம், பிரபாகரன், மற்றும் ராகவன் மீது படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர, பிரபாகரனும் ராகவனும் பாண்டி பஜாரில் ஓடத் தொடங்கினர். பொதுமக்கள் துரத்திச் செல்ல, பாண்டி பஜார் வீதியில் ஓடிய பிரபாகரனை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார்.


தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தார். பார்மா பஜாரில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸ்காரர் மாணிக்கம், பொதுமக்கள் துணையுடன் பிரபாகரனையும், ராகவனையும் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கண்ணனையும், மாம்பலம் போலீஸ் கைது செய்தது. இறுதிவரை, பிரபாகரனை அதிகாரபூர்வமாக கைது செய்த ஒரே நபர், தமிழக க
ாவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள், இந்த மாணிக்கம் தான்.

தப்பிச் சென்ற உமா மகேஸ்வரனுக்கு என்ன நடந்தது?

தப்பிச் சென்ற உமா மகேஸ்வரனால் சில தினங்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது. 6-வது தினம் (மே 25-ம் தேதி), கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில், உமா மகேஸ்வரனை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, உமா மகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டதில், தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதற்குமுன், மே 23-ம் தேதி நிரஞ்சன் என்பவர் இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

பிரபாகரன், உமா மகேஸ்வரன், ராகவன், கண்ணன், நிரஞ்சன் ஆகிய ஐந்து பேரும், சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த செய்தி இலங்கைக்கு சென்றது.

அந்த நாட்களில் இலங்கையில் பிரபாகரன் 18 கொலைகள், 2 பேங்க் கொள்ளைகளில் தேடப்படும் நபராக இருந்தார். அதேபோல உமா மகேஸ்வரன், 9 கொலைகள் 1 பேங்க் கொள்ளை ஆகியவற்றில் தேடப்படும் நபராக இருந்தார். தவிர இவர்களது ஈழ விடுதலை இயக்கங்கள் இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தன.

இதனால், இவர்கள் இருவரும் தமிழகத்தில் தமக்கு இடையே சண்டை போட்டு தமிழக போலீஸால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செய்தி, இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையின் அப்போதைய துணை பாதுகாப்பு அமைச்சர் டி.பி.வீரபிட்டிய, இந்த இருவரையும் கைது செய்த தமிழக காவல்துறைக்கு 10 லட்சம் ரூபா பரிசை அறிவித்தார். (பிரபாகரனை கைது செய்ததற்கு 5 லட்சம், உமா மகேஸ்வரனை கைது செய்ததற்கு 5 லட்சம்)

அத்துடன், தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு செல்ல இலங்கை ஐ.ஜி.பி.யாக (IGP – Inspector General of Police) இருந்த ருத்ரா ராஜசிங்கம் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு. ருத்ரா ராஜசிங்கம் சென்னை வந்து இறங்கினார்.

அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பேபி சுப்ரமணியம், ப.நெடுமாறனை சந்தித்து பிரபாகரனை நாடுகடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இது நடைபெற்றது 1982-ம் ஆண்டு. அப்போது ப.நெடுமாறன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி (தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்) ஆரம்பித்திருந்தார்.

நெடுமாறன், தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டார். பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்தாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினார். கருணாநிதி கொடுத்த ஐடியாவின்படி, சர்வ கட்சி கூட்டம் ஒன்றை கூட்டினார்.

இது நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் உட்பட ஈழ விடுதலைப் போராளிகள் குழுக்கள் எதுவும் பெரிதாக பிரபலமாக இருக்கவில்லை. எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு ஏதும் இருந்ததில்லை. பிரபாகரன் என்றால் யார் என்று தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரியாது.

சர்வ கட்சிகளும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாக, பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துவதில்லை என்ற முடிவை எடுத்தது மத்திய அரசு. தமிழக சிறையில் கைதிகளாக இருந்த இவர்கள் இருவரும் அப்போது இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டிருந்தால், ஈழப் போராட்டம் எப்போதோ முடிந்து போயிருக்கும்…

பிரபாகரன், உமா மகேஸ்வரன் ஆகிய இருவரையும் இந்தியாவில் இருந்து நாடு கடத்தாமல் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர், தற்போது ஈழ ஆதரவாளர்கள் பலராலும் திட்டித் தீர்க்கப்படும் கருணாநிதி என்பது பலருக்கும் தெரியாது. எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஐடியா போட்டுக் கொடுத்தார் என்பதை பின்னாட்களில் நெடுமாறன் ஒப்புக்கொண்டார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மத்திய அரசு, “இவர்களை நாடு கடத்த முடியாது” என அறிவித்ததையடுத்து, வெறும் கையுடன் திரும்பிச் சென்றார் ருத்ரா ராஜசிங்கம்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பிரபாகன், உமா மகேஸ்வரன் இருவரையும் கண்டிஷன் பெயிலில் விடும் தீர்ப்பு வழங்கப்பட்டது. கண்டிஷன் என்ன? இருவரும் நாட்டை விட்டு வெளியேற கூடாது. வழக்கு முடியும்வரை இருவரும் ஒரே நகரத்தில் இருக்க கூடாது.

உமா மகேஸ்வரன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் வழக்கு முடியும்வரை தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டது கோர்ட். அதையடுத்து உமா மகேஸ்வரன் சென்னையில் பெருஞ்சித்தனார் இல்லத்திலும், பிரபாகரன் மதுரையில், நெடுமாறன் இல்லத்திலும் தங்கியிருந்தனர்.

சிறிதுகாலம் மதுரையில் இருந்த பிரபாகரன், தலைமறைவாகி, இலங்கை சென்று விட்டார். இவர் மீது ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு, 7-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரனின் பெயர் உள்ளது. அந்த வழக்கில் இருந்து தான், பிரபாகரனை நீக்க வேண்டும் என தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சரி, வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் எங்கே?

தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவில், “முதல் குற்றவாளியாக” சேர்க்கப்பட்ட பிரபாகரன், இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்டார். அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்று புதுடெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல் அனுப்பியுள்ளார். சிவகுமார் (ராகவன்) இந்தியாவை விட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை.

ஜோதீஸ்வரன் (கண்ணன்) ———————-(திருத்தம் செய்யப்பட்டது -ஆ.ர் ), நிரஞ்சன் இறந்து விட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன், நிரஞ்சன் ஆகியோரை நீக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது.

பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இருவரில் உமாமகேஸ்வரன், 1989-ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டார். அவரது தலைமையில் இருந்த பிளாட் இயக்கம், தற்போது சித்தார்த்தன் என்பவரை தலைவராக கொண்டு இலங்கையில் இயங்குகிறது.

தற்போது பிளாட், அளவில் சிறிய அமைப்பாக இருந்தாலும், தமது இயக்கத்தின் ஸ்தாபகர் மற்றும் பொதுச் செயலாளர் உமா மகேஸ்வரன் இறந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளாக கருதி அஞ்சலி செலுத்தி வருகிறது.

அந்த அமைப்பின் தற்போதைய தலைவர் சித்தார்த்தன், “ஈழம் என்ற உயர்ந்த லட்சியத்துக்காக போராடி உயிரை விட்ட எமது தோழர் உமா மகேஸ்வரன் இறந்த தினத்தில், அவர்மீது பற்றுக் கொண்ட அனைவரும் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். லட்சியத்துக்காக இறந்து போன ஒருவருக்கு செய்யக்கூடிய அதிகபட்ச மரியாதையும், வீர வணக்கமும் இதுதான்” என்கிறார்.

சில நூறு உறுப்பினர்களே இருந்தாலும், இறந்துபோன தம் தலைவருக்கு உரிய மரியாதை கொடுத்து, அஞ்சலி செலுத்தும் அமைப்பாக உள்ளது பிளாட். ஆனால் பிரபாகரனுக்காக யார் அஞ்சலி செலுத்துகிறார்கள்.. ??????

-Thanks… ILAKKIYA

No comments:

Post a Comment